31.1.09

அண்டை உறவும், ஆண்டை உறவும், இந்திய அயலுறவும்


பேருந்து நெரிசலில் நசநசக்கும் வியர்வையைத் தாளாது தவிக்கிற நானும்.இடுப்பில் கைக்குழந்தையும் இன்னொரு கையில் மஞ்சள்பையையும் வைத்துக்கொண்டு திண்டாடும் கிராமத்துப் பெண்ணுக்கு இடம் தராத அரை நூறு மனிதர்களும்.


எதிர்வீட்டு அழுகைக்கு ஜன்னல் வழியே துக்கம் அணுப்பும் மத்திய மாந்தர்களும். ஆரியப்படை கடந்த வீரிய பெருங்காய டப்பாக்களும்.ஒற்றைவீட்டு சலவைக்காரரை மீசை திருகிக்கொண்டு மிதிக்கிற கோடிக்கணக்கான வீரர்களும். புலியை முறத்தால் விரட்டிவிட்டு நிம்மதியாய் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்க்கும் தமிழ்த்தாயினமும்.


பாகிஸ்தான் மீது வெடிப்பதற்காக மட்டும் பிரத்யேகமாக செய்யப்பட்ட இந்திய ஆயுதங்களும். மதம், ஜாதி, இன்ன பிறவற்றைக் கழிவுகளை நுகர்ந்தே கண்டுபிடிக்கும் மெய்ஞானமும். அயல்நாடுகளில் அடகுவைக்க சொல்லிக்கொடுக்கும் விஞ்ஞானமும்.


முத்துக்குமரனுக்கு முன்னாள் செத்துச் செத்துப் பிழைக்கும்.

30.1.09

அதிகாரத்துக்கு எதிரான ஆழமான கேள்விகளைப் பாய்ச்சுவது நிஜ


எண்பதுகளில் சாத்தூர் பிள்ளையார் கோவில் தெருவில்தான் தான் முதன் முதலாய்ப்பார்த்தேன் தோழர் கிருஷ்ணக்குமார் என்னையும் மாதவராஜையும் அழைத்துப்போனார். மேடை இல்லை, கொட்டகை இல்லை, மருந்துக்குக் கூட ஒரு பெண் இல்லை அதெல்லாம் கூட பரவாயில்லை. ஒலி பெருக்கி இல்லை அதை எப்படி நாடகம் என்று ஏற்றுக்கொள்வது. கண்மாய்ப்பட்டியில் கார்த்திகைக்கு வருசா வருசம் நடந்த ஏற்படுத்திய பிம்பம் எனக்குள் கேள்விகளெழுப்பியது.


வெறும் பொழுது போக்காகக் கழியாமல், அதிகாரத்துக்கு எதிரான ஆழமான கேள்விகளைப் பாய்ச்சுவது நிஜ நாடகங்கள். நாடகம் நடத்தியதற்காக கொல்லப்பட்ட புரட்சிக் கலைஞன் சப்தர் ஹஸ்மி. ஒற்றைக்காலில் சலங்கை கட்டி ஒரு கருப்புப் போர்வையோடு அடர்ந்த பாடல்களை சுந்தரத்தெலுங்கில் விதைத்துவிட்ட புரட்சிப்பாடகன் கத்தார். இவர்கள் தொடங்கி வைத்த வீதிநாடகங்கள் மிக மிக வலிமையானவை.


இரவு ஏழுமணிவாக்கில் தொடங்கியது நிகழ்ச்சி. முதலில் இருபது பேர்கள் பார்வையாளர்களாக . அரிதாரமில்லா நடிப்பின் ஒவ்வொரு அசைவும் இன்னும் கண்ணுக்குள்ளே நிற்கிற காட்சிகள் மாப்பிள்ளைக் கடை நாடகத்தின் காட்சிகள்.


கடையில் மாப்பிள்ளைகள், காட்சிப்பொருளாக நிறுத்திவைக்கப் பட்டிருப்பார்கள். சிப்பந்தி கடையைத் திறந்து ஒவ்வொரு மாப்பிள்ளையாக துணி வைத்துத் துடைப்பார். முதலில் கடைக்கு வரும் வாடிக்கையாளர் கருவாடு வேண்டுமெனக்கேட்க கடைக்காரர் கோபப்படும் காட்சி பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கிற எள்ளல் விமர்சனம்.
வாடிக்கையாளருக்கு தொலைபேசியில் ரக வாரியாக மாப்பிள்ளைகளின் விலை சொல்லுவது, கையிருப்பு இல்லை ரெண்டு நாளில் பேங்க் மாப்பிள்ளை வந்துவிடும் என்று பதில் சொல்லுவது, கிராமத்து தகப்பனும் மகளும் வந்து கேட்கும்போது அலட்சியப் படுத்துவது, ஊடே யாவரத்தைத் தொடதே என்று விரட்டுவது இப்படி அந்த நாடகம் எங்கும் நுணுக்கமான வாழ்வியல் பதிவுகள் பொதிந்து கிடக்கும். பெண்ணாக நடித்தவர் ஒரு கிராமத்து குமரியின் கோட்டோவியமாக தன்னைநிலைநிறுத்துவார். நகம் கடிக்கிற பெண்ணை "ஆக்கங்கெட்ட மூதி கடைக்குள்ள இருந்து நகத்தக் கடிக்காதெ" என்றுகடிந்து கொள்ளும் வசனம் திரும்பத்திரும்ப வரும். ஆனால் ஒவ்வொரு முறையும் சிரிப்பை வரவழைக்கும் சித்தரிப்புகளோடுவரும். இறுதியில் காரில் வந்திறங்கிய தகப்பணும் மகளும் சில சொற்ப கணங்களில் கொள்முதல் பண்னிவிடுவார்கள். அவர்களை கவனிக்கிற கடைக்காரனின் உபசரிப்பும் அவள் நகம் கடிக்கிற போது " பொம்பலப்புள்ள நகத்தக்கடிக்கிறதே அழகு சீதேவி " என்று மாறுகிற நெறிமுறைகளும் ஆழமான கேள்விகளின் பதிவு.


இப்படி நாடக வழிநெடுகிலும் சிரிக்கச் சிரிக்க அடைத்துக் கொடுத்த காலத்தின் பதிவுகள் இன்னும் கெட்டுப்போகாமல் கிடக்கிறது நினவுக்குடுவைகளில். நடிகர்களைப்பற்றிச் சொல்லவில்லையே, எல்லாமே கோவில்பட்டித் தமுஎச தோழர்கள். எழுத்தாளர் சாரதி, போஸ்டல் பாலு, எழுத்தாளர் உதயசங்கர், கிருஷி வாத்தியார், befi பால்வண்ணம், எழுத்தாளர் தமிழ்செல்வன், எழுத்தாளர் கோணங்கி, கரிசல் குயில் கிருஷ்ணசாமி எனும் இப்போதைய மிகப்பெரிய இலக்கிய ஆளுமைகள் சேர்ந்து கொடுத்த காலப்பொக்கிஷம் அந்த நாடகங்கள். அவை முற்போக்கு சிந்தனையிகளுக்கான அப்போதைய கங்குகள். கிராமத்துப் பெண்ணாக நடித்தவர் எழுத்தாளர் கோணங்கி. நெடுங்காலத்துக்கும் பிரமிப்பு நீங்காத செய்தி.


நாடகம் முடியும்போது ஆணும் பெண்ணுமாக தெருவடைத்துக் கூட்டமிருக்கும் நல்ல கலைகளின் விதி மாறாமல்.

வாழ்க்கை கிடக்குது ரோட்டோரமா



இன்று காந்தி நினைவு நாள்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்த நாளை மதவெறி எதிர்ப்பு நாளாக அணுஷ்டிக்கிறது.

சாத்தூரில் ஒரு ஐந்து சுதந்திரப்போராட்ட தியாகிகளைக் கௌரவிக்கத் திட்டமிட்டோம். தேடினோம். 1947 ல் சிறுவர்களாக வாலிபர்களாக இருந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். போராட்டத்தில் பங்கு கொண்டு சிறைக்குப்போனவர் ஒருவர் இருப்பதைக் கேள்விப்பட்டு நேற்று அவரைத் தேடிப்போனோம். ஊரின் கடைசியில் அண்ணாநகர் எனும் ஒரு ஒதுக்குப்புறத்தில் அவர் வசிப்பதாகச் சொன்னார்கள். நாங்கள் காலை ஏழு மணிக்கு அங்கு போனோம்.


இரு சக்கர வாகனத்தில் நானும் , மாதவராஜும், சங்கப் பொருளாளர் வழக்கறிஞர் விஸ்வநாத்தும் முன்னதாக போய்ச்சேர்ந்துவிட்டோம். அந்தப்பகுதியில் நின்று ஒவ்வொரு வீடாக நோட்டம் விட்டோம். பங்களா, காரைவீடு, ஓட்டுவீடு, தொகுப்புவீடு, வாடகைக் குடியிருப்பு இப்படி எல்லா தரப்பு வீடுகளும் இருக்கிறது. நாங்கள் திகைத்து நிற்கிறோம். இரண்டு நிமிடம் கழித்து தடதடவென ப்ரியா கார்த்தி வந்தார் " என்ன நிக்கிறீங்க இதா தியாகி ஜெயராமன் வீடு " என்று காட்டினார். அந்த இடத்தில் பத்து தென்னங் கூரைகள் கிடந்தது. அரிசிச் சாக்கை சுற்றிக்கட்டிய நான்கு கம்புதான் கதவு. உட்கார்ந்து தான் உள்ளே நுழைய முடிகிற பழங்கூடு .

எளிமை இல்லை வறுமை.

28.1.09

செம்புலப் பெயல்நீர் போல விரோதமும் அன்பும்


இருபத்தியோரு முறை அபாயச் சங்கிலி இழுக்கப்பட்டு அலைக்கழிக்கப் பட்டது சென்னையிலிருந்து டெல்லிசெல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ். சுமார் இரண்டு மணிநேரம் நாக்பூரைவிட்டு கிளம்பமுடியாமல் திணறியது. ரயில்வே காவலர்கள் விரட்டியபோது ஓடுவதும் பின்னர் திரும்ப வந்து ஏறமுடியாமல் போவதுவும் அவர்களின் நண்பர்கள் அபாயச் சங்கிலி இழுப்பதுவுமாக விளையாட்டுப் பொருளானது அந்த துரித வண்டி. தலையிலும் கைகளிலும் காவித்துணிகட்டிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் செய்த அத்துமீறல்களை ரயில்வே நிர்வாகம் கைபிசைந்தபடி பார்த்துக்கொண்டிருந்தது. குளிரூட்டப்பட்ட பெட்டி தவிர எல்லா முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளிலும் அணுமதிக்கும் படி பயணிகளிடம் நிலைய மேலாளர் கைகூப்பிக் கேட்டுக்கொண்டார். ரயில் நகர்ந்தது.


அதன் பின்னர் சட்டைப் பொத்தான்களைத் திறந்துவிட்டபடி அவர்கள் அடித்த லூட்டிகளை மாணவர்கள் கூட ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எல்லா நிலையங்களிலும் அவர்களுக்கு உணவும், தேநீரும் வழங்குவதற்கு அப்போதைய ஆளுங்கட்சி ஏற்பாடு செய்திருந்தது. மாணவர்கள் மேலதிகத் தெனாவட்டோடு அலைந்தார்கள். எங்களைப் பார்த்து ஒரு மாணவன் " நீங்கள் என்ன மதராசியா" என்று கேட்டான். " இல்லை நான் இந்தியன் " என்று சொன்னேன், " அப்படியானால் நான் இந்து " என்று முறைத்துக் கொண்டு சொன்னான். " நான் மனிதன் " என்று அவனுக்குச் சொன்னேன். ஒருவரை ஒருவர் அறியாது முறைத்தபடி பகல் கடந்தது.


அந்தக் கூட்டத்திலொரு மாணவன் சோர்வாய் இருந்தான் அவனை அழைத்து எங்கள் அருகே உட்கார வைத்தோம். நெடுநேர மௌனத்தை மாது தான் முதலில் கலைத்து விட்டான். எங்களின் பேச்சும் சிரிப்பும் அவனை எங்கள் பக்கம் இழுத்தது. பின்னர் தமிழையும் ஹிந்தியையும் ஆங்கிலம் மூலம் பறிமாறிக் கொண்டோம். எங்கள் கூட்டத்தில் ஒருவர் ஹிந்தி திரைப்படப் பாடலைப் பாடியதும் இன்னும் அதிகப்பேர் வந்து எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். ஒரு பன்னிரெண்டு மணி நேரத்துக்குப் பின்னர் ஒருவரையொருவர் புரிய முயன்றோம். டெல்லியில் இறங்கும்போது எல்லோரும் " போய் வருகிறோம் மாமா " என்று சொல்லிவிட்டு பிரிந்து போனார்கள் செம்புலப் பெயல்நீர் போல

27.1.09

ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்.




ஒரு கேளிக்கை விடுதியில் ஆண்களும் பெண்களுமாக இருந்தனர். 15 முதல் 20 குண்டர்கள் நுழைந்து அங்கிருந்த பெண்கள் அணைவரையும் கொடூரமாகத்தாக்கியிருக்கிறார்கள். இது நடந்தது வேறெந்த நாட்டிலுமில்லை. இந்தியாவில். கர்நாடகத்தின் மங்களூர் நகரில். குடியரசு தினத்தின் முந்திய நாள் இரவில். தாக்கியவர்கள் கர்நாடக அரசு முத்திரை குத்தப்பட்ட குண்டர்கள்.தாக்கப்பட்டவர்கள் முதலில் முஸ்லிம்கள், பின்னர் கிறித்தவர்கள், காலம் காலமாக தலித்துகள், இப்போது பெண்கள்.தங்களின் பலத்தைப் பிரயோகிக்க கட்டாயம் ஒரு நோஞ்சானைக் கண்டுபிடிப்பதில் வெறிகளுக்குள் வித்தியாசமில்லை.

வரலாறு நெடுகிலும் அவர்களுக்கு வேறு வேறு பெயர்கள் இருந்தாலும் பாசிசத்தின் செயல்பாடுகள் ஒரே மாதியானவை.சுடிதார் அணியக்கூடாது, ஒரே பேருந்தில் சகல மதத்தினரோடு பயணம் செய்யக்கூடாது, மதம் மாறக்கூடாது,ஆண் பெண் சகஜமாகப் பழகக்கூடாது என்னும் கொடூர விதிகள் அமலுக்கு வருவது புதியதல்ல. மிக மிகப் பழையது மனுவின் விதிகள். மதத்தின் பெயர் மாறலாம், நாடு மாறலாம், குணம் மாறாது.

நாடுகளுக்கு நடுவில் இருக்கும் எல்லைக்கோடுகள் கூட இளகிப்போகிற இந்த நாட்களில் தெருக்களின் நடுவில் எல்லைக்கோடுகள் உயருகிறது.

26.1.09

ஒரு முழுநாளின் சின்னச்சின்ன சந்தோஷங்களைஒரே கண்ணியில் கோர்க்கும் இசை.




பழையஇரவின் தீராத கனவுமுகம், விடிகாலைக்குளிர், புதுவெளிச்சம், பெயரறியாப் பறவையின் பாட்டு .
.
அலுவலகப் பரபரப்பில் பேருந்து பிடிக்க ஓடும்போதுஎதிர்பாராக் கணங்களில் சிரித்துவிட்டுக் கடக்கும் பழைய நண்பன்.


மருத்துவமனைக் காத்திருப்பில் சஞ்சலத்தைத் திசைதிருப்பும் புதுக்குழந்தை.
ஜன்னலோர இருக்கைமுகம் வருடக் காற்றுநெடுந்தூரப் பேருந்துப் பயணம்.
விளம்பரம், செய்திகள் தீராத்தொடர்யாவினுக்கும் தப்பித்துக் கிடைக்கும்பழைய பாடல்.


இப்படியான ஒரு முழுநாளின் சின்னச்சின்ன சந்தோஷங்களைஒரே கண்ணியில் கோர்க்கும் இசை.


மெய் வருத்தம், மன அழுத்தம்சோர்வு துக்கம் எல்லாவற்றையும்இலவசமாய்ச் சுத்திகரிக்கும் இசைபோதும் எபோதும்.

இடறுகிற கேள்விகளோடுஇன்னும் சிறிது நேரத்தில்



விடிகாலை எழுந்து சீருடையோடு பள்ளிக்கூடம் சென்ற குதூகலம்.கொடிக் கம்பைச் சுற்றி நீர்தெளித்து, பூக்கள் தேடிக் கொண்டுவந்து ஒரு கைக்குழந்தையைக் கையாளுவதைப் போல அதற்குள் வைத்து மடக்கிய தொழில்நுட்பம்.பிரமுகர் கயிறு சுண்டும் போது சிதறிவீழும் ஒவ்வொரு பூவிலும் சந்தோஷம் சிதறி வரும். கொடி வணக்கம் படிக்கும் போதுஎல்லோருக்குள்ளும் ஒரு ராணுவவீரனின் ஆவி குடியேறி முறுக்கேறும். கைக்குள் பொத்திவைத்த ஆரஞ்சு மிட்டாயின் இனிப்பு நெடுநேரம் கூடவந்த குடியரசு தின நாட்கள்.

நிமிடத்திற்கு ஐந்து ரூபாய்க்கு தேசப்பற்றுபாடல்கள் விற்பனைக்கு வந்துவிட்டது நேற்றிரவிலிருந்தே அலைபேசியில்.
இப்போது மூவர்ணக் கொடியில் எத்தனை நிறம் என்றறியாத நடிகையின் தேசப்பற்றை ரசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தோடு தொலைக்காட்சிக்கு விடிகிறது குடியரசு நாள்.

செய்திகளைதிருகினால்.
அப்பாவிப் பிஞ்சுத் தமிழ்சடலங்களை அடுக்கி வைத்து அதிலேறி இலங்கை ராணுவம் முல்லைத்தீவைப் பிடித்துக் கொக்கரிக்கிற சத்தம் பாடத்திட்டத்தில் இடம்பெறுமா? இஸ்லாமாபத்தில் ஒபாமாவின் முதல்குண்டு வெடித்த சத்தம் கேட்கிறது. பள்ளியறியாச் சிறார்கள் பற்றுவதற்கு அவர்தேசம் என்னகொடுக்கும்? காசாவில் குண்டு துளைத்த பள்ளிக் கூடத்தில் விரித்துவைத்த புத்தகத்தில் மரண பயம் நீங்காத கண்களோடு என்ன பாடம் படிப்பார்கள்?.

இடறுகிற கேள்விகளோடு இன்னும் சிறிது நேரத்தில் குண்டு துளைக்காத மேடையேறி இடைக்காலப் பிரதமர் குடியரசுப் பேருரையாற்றுவார்.
பின்னர் சினமா சிற்றுண்டி, பட்டிமன்ற நொறுக்குத்தீனி விகடத்தேனீர், இப்படியே கழியும் இந்த நாள் அண்டைவீட்டின் அழுகுரல் கேட்காத ஒலியளவில்

25.1.09

அச்சிலேறாத பாடங்கள்


நூத்தி ஏழுக்கு யூரின் கேன் வை,

பெருமாளு, சிசேரியன் பேசண்டுக்கு துணிமாத்து,

நூத்திப்பண்ணண்டுல டயோரியா பேசண்டு ரூம்ல லட்ரின் க்ளீன் பண்ணு,

அறிவே கிடயாதா, இங்க பாரு ஆரஞ்சு தோலு கெடக்கு,.

.....என்னத்தா எனக்கு இன்னுமா டிபன் வாங்கிட்டு வரல


அந்த தனியார் மருத்துவமனையெங்கும் இந்தப் பெயர் அங்கும் இங்கும் இழுபட்டுக் கொண்டே இருக்கும். கூப்பிடுகிற திசையெங்கும் முனுமுனுத்துக்கொண்டும், பதில் குரல் கொடுத்துக்கொண்டும் ஒரு சின்னப்பெண்போல அலைகிற அந்தம்மாவுக்கு வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். வேலை ஓய்ந்த நேரங்களில் கார் ஷெட்டுக்குப்பக்கத்தில் வெத்திலை போட்டுக்கொண்டிருப்பார்கள். காய்ச்சல் தலை வலியென்றால் வரக்காப்பி வாங்கி அஞ்சால் அலுப்பு மருந்து கலந்துதான் குடிப்பார்கள். மாத்திரை, சிரிஞ்ச், ஊசி, டானிக் பாட்டில், குளுக்கோஸ் பாட்டில் என்பதெல்லாம், அவர்களுக்கு குப்பையில் சேர்க்கிற பொருள் என்பதுதான் பொருள்.


பேறுகாலத்துக்கு அனுமதிக்கப்பட்ட மனைவியோடு ஒருவார காலத்தில் தாதிப்பெண்களும், பெருமாளம்மாவும் எங்களோடு ரொம்பவும் சிநேகமாகிப்போனார்கள். சீருடையோடு சாயங்காலங்களில் வரும் எல் கே ஜீ படிக்கிற முதல் பையனுக்கு பாடம் சொல்லித்தருமளவுக்கு தாதிப்பெண்கள் மிக அன்னியோன்னியமாயிருந்தார்கள். எடுபிடி வேலைகள் குறைந்திருக்கிற நேரங்களில் பெருமாளம்மா எங்கள் அறைக்கு வருவதும், துணைக்கிருக்கிற மாமியாரோடு வெத்திலையும் ஊர்க்கதைகளும் பகிர்ந்துகொள்வது வாடிக்கையானது. அப்போது பையனைச் ''சின்னவரே, சாமி.. ஒங்க குட்டித்தம்பிய நாந்தூக்கிட்டுப் போறேன் '' என்று கொஞ்சும். எல்லோரையும் போலவே அவனும் '' ஏ பெருமாளு '' என்று கூப்பிட்ட போது வலித்தது. ஆனாலும் பெருமாளம்மாவின் முகத்தில் ஏதும் சலனமில்லை. அதட்டி '' ஆண்டி '' என்று கூப்பிடச் சொன்ன போது 'ஆண்டி' என்பதுவும் பேர்தானே என்று சொன்னது. பிறகுதான் அத்தை என்று கூப்பிடச் சொன்னேன். அவனும் வாய்க்கு வாய் அத்தை என்று கொஞ்சினான். தாதிப்பெண்களையும் அப்படியே கூப்பிடச் சொன்னான். அப்போதெல்லாம் பெருமாளம்மா முகத்தில் மின்னல் வந்து குடிகொள்ளும்.


நாங்கள் ஆசைப்பட்ட அந்த நாள் வந்தது.டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்னால் பெருமாளம்மாவுக்கு ஐம்பது ரூபாய் சன்மானமாகத் தந்தோம்.பிடிவாதமாக வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டு, பிறகு வாங்கிக்கொண்டு கானாமல் போய்விட்டார்கள். அது செய்த உதவிக்கும் அன்புக்கும் பதிலாகப் பணம் தந்து விட்ட திருப்தியிருந்தது. கணக்கு நேர் செய்யப்பட்டதாக எண்ணிக்கொண்டு வீடு வந்தோம்.


ஆரத்தி தீபத்தோடு புதுக்குழந்தையின் வருகை வீடெங்கும் சந்தோச ஒளி வீசிக்கொண்டிருக்க, மூத்தவன் மட்டும் இது எதிலும் ஒட்டாமல் ஒரு குட்டியூண்டு சைனாக்காரின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தான். அது அவனுக்கு எப்படி வந்தது என்று தெரியாமல் நண்பர்கள் சொந்தங்கள் என ஒவ்வொருவராக அந்தச்சைனாக்காரோடு பொருத்திப் பார்த்தோம். யாருமே பொருந்தவில்லை. ஒரு வேளை பக்கத்திலிருக்கும் கடையில் திருடியிருக்கலாமோ என்ற சந்தேகப்பல் கூட வளர ஆரம்பித்தது. ஆனால் அவனோ, '' இது அத்தை கார் '' சாவகாசமாகச்சொல்லி விட்டு விர்ரென்று அறைமுழுக்க அலைகிற அந்தக்காரின் பின்னால் போனான். வீடு மொத்தமும் திரும்பிப்பார்த்தது. குழந்தைகளைத்தவிர எல்லோரும் குற்றவாளிக் கூண்டிலிருந்தோம். பெருமாளம்மாளின் குள்ள உருவம் அன்னாந்து பார்க்க முடியாத உயரத்தில் இன்னும் இருக்கிறது.

24.1.09

ஆறுகள் எல்லாம் பெண் பெயர் சூடிக்கொண்டோடும் இங்கே.





நிறைய்ய ஆறுகள், 33 ஆற்றுப்படுகைகள், மூன்று கடல், பல மலைத்தொடர், ஒரு பாலைவனம்,

வருடம் முழுக்க மழைபொழிகிற சிராபுஞ்சி, உலகுக்கே படியளக்கும் நெல்லும் கனியுங் கிழங்கும் கோதுமைகளை கணக்கின்றித்தரும் நாடு.

மதுரையில் சித்திரை வெயில் கொளுத்தும் ஜூன் ஜூலை மாதத்தில் ஒரு அறுபது கிலோ மீட்டர் பயனம் செய்தால் போதும் குளுகுளு கொடைக்கானல் வரும்.

ஒரே தேசத்தில் ஆயிரமாயிரம் விநோதங்கள் விளைந்துகிடக்கிறது.

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.

ஆறுகள் எல்லாம் பெண் பெயர் சூடிக்கொண்டோடும் இங்கே.

பூக்களும், தென்றலும், நிலவும் நிலமும் அவளே,

நடுகல்லும், ஒற்றைப்பனையும் உருமாறும் லட்சோப லட்சம் தெய்வங்களாய்

அதில் பெண்ணே பெரும்பாண்மை.



இங்குதான் பிறந்த பெண்குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்துக்கொல்லும் சிசுக்கொலை நடக்கிறது. இங்குதான் பெண்குழந்தைகளை இரண்டாம் தரமாக்குகிற பெற்றோர்கள் இருக்கிறார்கள். இங்குதான் பால்ய விவாகம் நடத்துகிற கலாச்சாரக்கொடூரம் நடக்கிறது.

பேருந்து நிறுத்தத்தில் ஒற்றைத்தாளத்தின் அதிர்வில்மூங்கில் கம்பின் நுனியில் வயிற்றை அடகு வைத்துஅவமானக் கொடியாய்த் தொங்குகிறது பெண் குழந்தையின் உடல்.

நெடுந்தூர ரயில் பயணத்தில் பெயர்தெரியாத நிறுத்தத்தில் ஏறிகழிப்பறையின் பக்கம் நிற்கும் பதின்மூன்று வயதுப்பெண்ணின்கண்ணில் தெரிவது காமம் அல்ல.


முடைநாறும் மூவாயிரம் ஆண்டு ஒதுக்குதலின் அவமானம்.

இன்று சர்வதேச பென்குழந்தைகள் தினம்.

22.1.09

சந்தோஷங்களுக்குப் பின்னால்



அவர் இடது கையால் பணம் வாங்கிக்கொண்டு போகும்போது எரிச்சலாக இருந்தது. இடது கைப்பழக்கம் ஒன்றும் கொலைக்குற்றம் இல்லை. பாங்கிங் ரெகுலேசன் ஆக்ட், ஐ டி ஆக்ட், இந்தியன் பீனல் கோட் எதிலும் இடது கைப்பழக்கம் குறித்த குறிப்பேதும் இல்லை. சின்ன வயசிலிருந்தே '' துட்ட நொட்டாங்கையால வாங்காத '' சொல்லும் அம்மாவின் வார்த்தை ஆழமாக வேரோடியிருந்தது. இடது பக்கம் பயணப்பட வலியுறுத்தும் சாலை விதிகளும் கூட கூடவே வருகிறது. இந்த முரண்பாடு குறித்து யோசித்தால் நம்பிக்கைக்குக்கும் விஞ்ஞானத்துக்கும் சண்டை வரலாம். அது போகட்டும். அவர் இன்னொரு தரமும் இடதுகையாலே பணம் செலுத்தினார். ஒருநாள் பணம் எடுக்கும் ரசீதை வாங்கிக்கொண்டு தணியாக உட்கார்ந்து எழுதும் போதுதான் அதைக்கவனிக்க நேர்ந்தது. . பாரதியைப்போல முண்டாசு கட்டியிருக்க முகமும் கைகளும் வித்தியாசமாக இருந்தது. உதடு கோணலாகி மீசையில்லாமல் இருந்தார். ஒரு வேளை குஸ்ட ரோகியாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றிய உருவம். ஒரு நாள் ஆளில்லா நேரத்தில் அவர் வந்தபோது கவனமாக வலதுகை ஊனமான காரணம் கேட்டபோது தான், அது பட்டாசுத்தொழிற்சாலை விபத்தில் கிடைத்த பரிசு என்று தெரிந்தது. எங்கே எப்போது நடந்தது என்று கேட்டதற்கு விலாவாரியாக ஏதும் சொல்லவில்லை. பெருத்த யோசனையில் அந்த கருகிய முகம் மேலும் கருப்பானது. ஒரு நீண்ட பெருமூச்சோடு தலையை குலுக்கிவிட்டு 'என்னத்தச் சொல்ல' என்று கடந்து போனார். இரண்டு மாத காலம் ஓடிப்போனப்பிறகு தான் இயல்பாகப் பேசினார். அது வரையில் அவருக்கு நம்பிக்கை வரவில்லை.
ஒரு மாலை நான்கு மணிக்கு உப்புச் சப்பில்லாத காரணத்தோடு வங்கிக்கு வந்தார். ஆளில்லாத வராண்டாவுக்கு அழைத்துக்கொண்டு போய் பேசினார். அவருக்குத் தஞ்சாவூர்ப் பக்கம் சொந்த ஊர். விவசாயக்கூலி வேலைக்கு சன்மானத்தை விட அவமானம் தான் நிறையக் கிடைத்ததாம். ஓரளவுக்கு படித்த படிப்பினால் கோபம் நிறைய்ய வந்ததாம். அங்கிருந்து காலந்தள்ள முடியாமல் சிவகாசிக்கு மூட்டை முடிச்சோடு வந்திறங்கி பட்டாசுக் கம்பெனிக்கு கணக்கெழுதப் போனார். குட்டி ஜப்பான் என்கிற பெருமையை அடைகாத்துக்கிடக்கிற அந்த ஊரில் பத்து வருசம் கரிமருந்தும் கந்தகமும் சூழ்ந்தபடியே வாழ்கை கழிந்தது. அந்தச் சனிக்கிழமையன்று, சம்பளம் வாங்கிக்கொண்டு, அங்கேயே வேலை பார்க்கிற தனது மனைவியோடு சினிமாவுக்குப்போகிற கனவோடு நகர்ந்திருக்கிறது அவரது பொழுது. மதியம் சரியாக ஒரு மணிக்கு தன் வாழ்நாளை மொத்தமாக அதிரவைத்த சத்தம் கேட்டிருக்கிறது. தீபாவளியை ஒரு பெரு நகரம் கூடி ஒரே இடத்தில் வெடித்தது போலப் புகைமூட்டம். அந்தப்புகையினூடாகக் கேட்ட அலறலும், மரண ஓலமும் தான் அவர் கேட்ட கடைசிச் சப்தம். ஒருவாரம் கழித்து நினைவு திரும்பியபோது எல்லாமே முடிந்து போயிருந்தது. எழுந்து நடமாடியதும் தனது மனைவியைப் புதைத்த இடத்துக்குத்தான் நேரகப்போனாராம். சொல்லி முடிக்கும்போது அவரது கண்ணீரெல்லாம் காலியாகிப்போயிருந்தது. பிறகு நெடுநேரம் மௌனமாக அமர்ந்திருந்துவிட்டு இப்போது பெட்டிக்கடை வைத்து வயிற்றை நிரப்பிக்கொண்டு நஷ்ட ஈட்டுப்பணத்தை வைத்துக்கொண்டு பூதம் காத்தது போல அலைகிறேன் என்று சொல்லி விட்டுப்போனார். அந்தப் பணத்துக்குள்ளே தான் அவரது காதல் மனைவியின் கடைசி அலறல் ஒளிந்து கிடக்கிறது. அவள் கேட்ட சேலையும் கம்மலும் வாங்கப்பணமெல்லாம் நிறைய்ய கிடக்கிறது. இப்போது அவள் இல்லை.
அப்புறம் வரும்போதெல்லாம் வணக்கம் சொல்லுவதும் போகும் போது சொல்லிக்கொண்டு போவதுமாக சினேகமாகிப்போனார். தீபாவளி நெருங்கிக்கொண்டிருந்த இன்னொரு நாள் அடுத்தடுத்து இரண்டு பட்டாசு வெடிவிபத்து நடந்தது. வருசா வருசம் இப்படித்தான் நடக்குமாம். குட்டி ஜப்பானுக்குப்பதில் குட்டி ஹிரோசிமா அல்லது நாகசாகி என்றுகூட வைத்திருக்கலாம். இப்போது உற்றுக்கவனித்தால் அவரைப் போலவே இன்னும் பல பேர் அந்த வங்கிக்கிளைக்கு வந்து போகிறார்கள்.

18.1.09

இடிபாடுகளில் தொலைந்த இந்திய ஞானம்

பீகார் மாநிலம் புத்தகயாவில் நடந்த மாநாட்டுக்கு மாதவராஜ், மாப்பிள்ளை ஆண்டோ, பாலுசார், மணியண்ணன் ஆகியோரோடு ஒரு இருபது பேர் போனோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள். நீரோடிப் பயமுறுத்தும் அகலமும் ஆழமுமான பெயர் தெரியாத ஆறுகள். புகை வண்டிப் பயணமெங்கும் கிடைத்த காட்சிகள் இது. இரவு இரண்டரை மணிக்கு காலகண்டி ரயில் நிலையத்தில் இறங்கும் போது கடும் குளிர். பாதுகாப்புக் கருதி விடியும் வரை அங்கிருந்து யாரையும் கிளம்ப வேண்டாமென்று காவல் துறை தடுத்துவிட்டது. நாங்கள் ரயில்வே ஊழியர் சங்கத்தின் அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டோம். அலுவலகத்துக்கு நடந்து போகையில் தரையெங்கும் பயணிகள் சுருண்டு படுத்துக்கிடந்த்தனர். காலையில் ஐந்தரை மணிக்கு கிளம்பிய போதுதான் தெரிந்தது சுமார் மூவாயிரம் பேர் வெட்டவெளியில் மொட்டைக்குளிரில் படுத்துக் கிடந்தார்கள். அவர்கள் கூட்டம் கூட்டமாய் கூலி வேலைக்கு இடம்பெயர்ந்து செல்பவர்கள் என்று சொன்னார்கள். தேசம் செழித்து மக்கள் வறுமையில் வாடுகிற முரணும் விநோதமும் கொண்ட தேசம் எனது இந்தியா. தனித் திறனாளர்களாக கிரிக்கெட் வீரர்கள் முதலிடத்தில் இருக்கும்போது இந்திய அணி அதள பாதாளத்தில் கிடக்குமே அது போல. நகரங்கள் எல்லாம் குண்டு பல்பில் மங்கிக் கொண்டிருக்க கிராமங்கள் இருளில் கிடக்கிற பிகார். இன்னும் முறுக்கிய மீசையோடு நிலச்சுவாந்தார்கள் குதிரையில் வலம் வரும் மாநிலம். பகலிலே ஓடும் வாகனங்கள் எல்லாம் தனியாருக்குச் சொந்தமான ட்ரக்குகள். நினைத்தால் போகும் இல்லையென்றால் வேறு ஏற்பாடுகள் தான். ஐந்து மணிக்குமேல் அதுவும் இல்லை. சாலையில் வாகனங்கள் பார்க்க முடியாது. எல்லாவற்றையும் தனியாருக்குக் கொடுத்தால் சௌஜன்யமாக இருக்கலாம் என்று சோதிடம் சொல்லும் நண்பர்கள் ஒரு மாதம் பீகரைச்சுற்றிப் பார்க்கலாம்.
அங்குதான் உலகின் அதிக மக்கள் தொகை வழிபடும் புத்தர் கோவிலும் போதிமரமும் இருக்கிறது. நம்ம ஊர் தொழில் நுட்பக்கல்லூரிகளை நினைவுபடுத்தும் பெரிய பெரிய தர்மசாலாக்கள் இருக்கிறது. அங்கிருந்து அறுபது கிலோ மீட்டரில் வாரணாசி இருக்கிறது. எண்பத்தி ஏழு கிலோ மீட்டரில் நாலந்தா இருக்கிறது.
ஒரு கிலோ மீட்டர் பரப்பளவு. முப்பது மீட்டர் அகலமுள்ள நடைபாதை. சுமார் இரண்டாயிரம் ஆசிரியர்களோடு பத்தாயிரம் பௌத்த மாணவர்கள் தூரக்கிழக்கு நாடுகளில் இருந்து வந்து தங்கிப்படித்த உலகின் முதல் பல்கலைக்கழகம் நாலந்தா. ஐந்தாம் நுற்றாண்டுக்கும் பனிரெண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என்று கணிக்கப்படுகிறது. அந்தக்காலத்திலேயே அங்கே இறையியல், இலக்கணம், தர்க்கசாஸ்திரம், வானவியல், இயல்பியல், மருத்துவம், மனோதத்துவம் ஆகியவை கற்றுத் தரப்பட்டிருக்கிறது. உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும் சீன யாத்திரிகருமான யுவான் சுவாங் நலாந்தாவின் பழைய மாணவர். சீக்கிய மதகுரு குரு நானக், ஜனநாயக விதை போட்ட நல்லரசன் அசோகன், மஹாத்மா காந்தி, இஸ்லாத்தின் சூவ்பி தத்துவம், இவற்றுக்கு ஊற்றுக்கண் நாலந்தா. இன்றைக்கும் உலகமெங்கும் பரவிக்கிடக்கின்ற பௌத்த விகாரைகளுக்கு இங்கிருந்து தான் பிடி மண்ணெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

இரண்டடுக்கு தங்கும் அறைகள், ஏழு அடுக்கு தியான மண்டபம், கல்வி சாலை, கோவில்கள் யாவும் தனித்தனியே அமைந்திருக்கிறது. ஒருகிலோமீட்டர் பரப்பளவில் எங்கு தண்ணீர் விழுந்தாலும் மைய மண்டபத்துக்கு அருகிலுள்ள தெப்பத்துக்கு வந்துசேரும் ஏற்பாடு. இடிபாடுகளில் தப்பித்து இன்னும் உருக்குழையாத கட்டைச்சுவர்கள் கட்டிடக்கலையைப் பெருமைப் படுத்துகிறது.

பதிவுலகினருக்கு கொட்டாவி வரும் இந்த ஒட்டை ரிக்காட்டுத் தகவல்கள் அவசியமாவெனத் தெரியவில்லை. ஆனால் ஒரு கேள்வி மட்டும் அத்தியாவசியமாகிறது.
இவ்வளவு சிறப்புமிக்க ஒரு கல்வி சாலை ஏன் பாதுகாக்கப்படவில்லை ?.
உலகத்துக்கு ஆனா ஆவன்னா சொல்லிக்கொடுத்த இந்தியா இன்று ஒரு கலர் பிக்சர் டியுப்புக்கும், மைக்ரோ சாப்டுக்கும்கையேந்துவதன் காரணமென்ன ?.
இன்னய தேதி வரை நம்மால் ஒரு சிறு குண்டூசியைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையே ஏன் ?.

அடுத்தடுத்து நடந்த படையெடுப்பில் தரைமட்டமாக்கப்பட்டது நாலந்தா. அங்கிருந்து கிளம்பிய சமண பௌத்த துறவிகள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டார்கள். போதி மரம் வளர, வளர வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட உடல்களிலிருந்து பீறிட்ட குருதியோடு தர்க்க ஞானமும், பரிணாமத்தேடலும் உறைந்து போனது. உலகின் மிகப்பழம் பெரும் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு மூன்று மாதங்கள் தழல் விட்டு எறிந்திருக்கிறது. பற்றி எறிந்த தீயில் இந்திய மெய்ஞானமும்,அறிவியலும்சமூகக் கேள்விகளும் சாம்பலாகிப்போனது. அந்த இடத்தில் இப்போது ஒரு உயர்நிலைப் பள்ளிகூட இல்லை. இந்தியாவின் மொத்தக் கல்விமுறையே அதன் பழைய மாணவர்களாக மாறியிருக்க வேண்டிய ஒரு மாபெரும் வாய்ப்பு இனப் படுகொலையோடு மறுக்கப்பட்டிருக்கிறது.
அதன் பின்னர் வந்த குருகுலக்கல்வி முறைதான் உலகமறிந்ததே. ராஜாக்களுக்கும், பண்ணையார்களுக்கும் முதுகு சொரிந்து கொடுத்த கல்வித்திட்டம். அந்தக்கல்வி முறையைக் காப்பியடிக்கக்கூட சாமன்யர்களுக்கு உரிமையில்லை என்று சம்பூகனையும், ஏகலைவனையும் தண்டித்தது. அப்புறம் நம்ம மெக்காலேயின் அடிமைக் கல்வித்திட்டம் இதோ இந்த நிமிடம் வரை நீடிக்கிறது. மெக்காலேவைப் படித்த யுவன்களும், யுவதிகளும் கூட்டம் கூட்டமாய் நாலந்தாவுக்கு வந்து போகிறார்கள். வரலாற்றுப்பாடத்தில் ஒரு மதிப்பெண் கேள்வியாகக்கடந்து போகிற அந்த நாலந்தா மீது கடலைத்தோல்களையும் அது மடித்த காகிதத்தையும் வீசிவிட்டுப் போகின்றனர்.

பிரமிப்போடு அந்த இடிபாடுகளிலிருந்து ஒரு துகள் செங்கல்லையாவது எடுத்துக்கொண்டுவர ஆசையிருந்தது. ஆனால்நம் பேரப்பிள்ளைகளும் வந்து கால் வைத்துவிட்டுப் போகும் போது கருப்பும் சிகப்பும் கலந்த அந்த செங்கற்கள் மிஞ்சிநிற்கட்டும் என்று மனம் மாறித்திரும்பி வந்தோம்.
முரண்பாடுகள்

17.1.09

ஓளியும், இருளும்




பளபளக்கிறகாரில் 'அழகி"ய மனைவியோடும், கொலு கொலு குழந்தையோடும் அவர்கள் வருவார்கள். பல்பொருள் அங்காடிக்குள் நுழைவார்கள். பெண்குழந்தை விலையுயர்ந்த பொம்மையைப் பார்த்து கை நீட்டும். தாய் அதட்டுவாள். குழந்தை சோகமாகும். தகப்பன் வருவான். அடுத்தகணம் ஒரு கிரெடிட் கார்டை எடுத்து நீட்டுவான். விஸ்க்கென்று ஒலி. எட்டாத பொம்மை கைகளிலும், புன்னகை முகத்திலுமாக அந்தக் குழந்தை. ஒவ்வொரு பொருளாய் கைநீட்ட நீட்ட கிரெடிட் கார்டு விஸ்க் விஸ்க்கென்று ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும். வாங்கும் சக்திக்கும், பொருளின் விலைக்கும் குறுக்கே நிற்கிற திரைகள் அறுக்கப்படுகின்றன.
கார் நிறைய பொருட்களோடு அவர்கள் புறப்படுவார்கள். வானுயர்ந்த கட்டிடங்கள் நிறைந்த அந்த பெரு நகர வெளியில் நிலா தெரியும். குழந்தை அதையும் கைநீட்டி காண்பிக்கும். கிரெடிட் கார்டு விஸ்க்கென்று ஒலியெழுப்ப முழுக்குடும்பமும் சிரிக்கிற காட்சியோடு விளம்பரம் உறையும்.


எல்லா விளம்பரங்களும் சந்தோஷச் சிரிப்போடுதான் முடிகின்றன. உடல் குலுங்கி, முகம் மலர்ந்து, பற்கள் தெரிய சிரிக்கிற அந்தக் கணங்களில், விளம்பரப் பொருளின் பேர்களை வயது வித்தியாசமின்றி பார்வையாளனின் மனதில் பதிய வைக்கிற செப்படி வேலை இது. நிறைவேறாத ஆசைகளை நிஜமாக்குகிற அற்புத விளக்குகளாக கிரெடிட் கார்டு உன்னதப்படுத்தப்படுகிறது. மாயக்கம்பளமாக விரிகின்றன தொலைக்காட்சி விளம்பரங்கள். நிலாவையும் தரையிறக்கத் துடிக்கும் பத்து சதவீதத்துக்கும் குறைவான இந்தியர்களை முன்னிறுத்துகிறது மாய்மால வெளிச்சம்.

இன்னொரு புறம் சாதாரண மக்களின் மீது அடர்ந்த இருட்டுதான் விழுந்து கிடக்கிறது. அந்தப் பேருந்து நிலைய வாசலில் அந்த இருட்டின் குரலாய் ஒரு குழந்தையின் அழுகை கேட்டுக் கொண்டிருந்தது. திரும்பிப் பார்த்த போது எண்ணெய் வழிகிற முகங்களோடு இறுக்கிப் பின்னிய ஜடையோடும் மூன்று குழந்தைகளின் தாய் நின்று கொண்டிருந்தாள். இடுப்பில் இருந்த அந்தக் குழந்தை தாயின் காது வளையத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. இன்னொன்று மணலில். நான்கு வயதுள்ள அடுத்த குழந்தை பழக்கடையை குறிவைத்து அழுது கொண்டிருந்தது. இரவு ஏழு மணிக்கு அடுக்கி வைத்திருந்த பழங்களின் அழகால், குழந்தையின் பசி கூடுதலாயிருக்க வேண்டும். நிலாவைக் காட்டினாள். பஸ்ஸைக் காட்டினாள். அழுகையை திசை திருப்ப முடியவில்லை. "புளிக்கும்" "சளி புடிக்கும்" என மழுப்பிப் பார்த்தாள். அப்பா வந்ததும் வங்கித் தருவதாய் பிரச்சினையை தள்ளிப் போடப் பார்த்தாள். அழுகை உக்கிரமானது.


இப்போது சுற்றி நின்ற அனைவரின் பார்வையும் அந்தத் தாயின் பக்கம். அவமானமாக இருந்திருக்க வேண்டும். குழந்தையை இழுத்துக் கொண்டு நகர முயன்றாள். தோற்றுப் போனாள். ஒரு ஆரஞ்சுப்பழம் அஞ்சு ருபாய்க்கும், கால் கிலோ திராட்சை ஆறு ருபாய்க்கும் வாங்கலாம். பத்து ருபாய் இருந்தால் ஒரு ஆப்பிள் கூட வாங்கலாம். அதற்குக் கூட வக்கில்லாத வாழ்க்கையின் குரூரம் கோபமாய் கொப்பளித்து அழுகிற குழந்தையின் முதுகில் அப்பியது. அடித்துத் தரையில் தள்ளி விட்டாள். புழுதியில் புரண்ட குழந்தையின் அழுகுரல் சுற்றி நின்ற அணைவரின் நெஞ்சையும் பிசைந்திருக்க வேண்டும். அவமானம், வறுமை, இயலாமையோடு குழந்தையின் அழுகையும் சேர்ந்து தாயின் கண்களில் நீராய் கோர்த்து நின்றது.


கனவாக, காதலாக, குழந்தையின் அற்புத உலகின் ஊற்றுக்கண்ணாக காலந்தோறும் ஒளிரும் நிலவைக்கூட விலை பேச தயாராகிறது ஒரு உலகம். சவத்துக் கிடக்கும் பழங்களும், மூன்று வேளைச் சோறும் கூட நிலாவை விட தூரமாகிவிட்ட இன்னொரு உலகம். முரண்பட்டுக் கிடக்கிறது இந்த தேசம். ஏக்கமும், பெருமூச்சும் பெருகிப் பொங்கும் வேளையில் ஒளி எங்கிருந்து வரும்?


நன்றி : bank workers unity : மாத இதழ்

16.1.09

அரசின் செல்லப் பிள்ளைகளும், சிக்னல்களில் கைநீட்டும் அழுக்குப் பிள்ளைகளும்




நகர நெரிசலில், காலைப் பரபரப்பில், சிறிது இடறினாலும், சேதம் தவிர்க்க இயலாத நெல்லை வண்ணாரப்பேட்டை சிக்னல். அங்கே ஒரு உணவு விடுதிக்குப் போகும்போது ஒரு ஆறு வயதுப்பெண் வந்து வழிமறித்தாள். மாநிறம், கேள்விகளும், பாண்டசியும், விளையாட்டுக்களும் ஒளிந்துகிடக்கும் அகலக் கண்கள், அழுக்குச் சிறுமி.



" ய்ய்ய்யாயா...."



என்ற உயிர் பிடுங்கும் குரலோடு முகத்துக்கு நேரே கையை நீட்டினாள். ஒரு ரெண்டு ரூபாய் நாணயமும், இரண்டு ஐம்பது பைசா நாணயமும் கையில் இருந்தது. அவை ஒன்றோடொன்று உரசியதில் வாகன இரைச்சலை மீறி ஒரு பிச்சை சுரம் கேட்டது. உணவு விடுதிக் காவலாளி அவளை அதட்டி விரட்டினார். பயமற்று நின்று என்னிடம் வாங்கிக் கொண்டு அடுத்த நபருக்கு நகர்ந்தாள்.



" சோம்பேறிக , கையுங்காலு தெடமா இருக்குல்லா, இதுகளுக்கெல்லா எறக்கப்படக் கூடாது சார்வாள் ".


அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரண்டு வயசிருக்கிற இன்னொரு பெண்குழந்தை ஓட்டமாய் ஓடி வந்து எனது கால்சராயை இழுத்து கையை நீட்டியது. கொஞ்சம் கோபம் வந்தாலும் அதன் முகத்தில் இருக்கிற உலகறியா மழலை என்னைசெந்தூக்காகத் தூக்கிக் கண்ணத்தில் முகம் வைக்கத்தூண்டியது.அலுவலக நண்பர் குழந்தை மாதிரி, பேருந்தில், புகை வண்டிப் பயணத்தில், அருகிருக்கும் முன்பின் தெரியா சக பயணியின் குழந்தை மாதிரி அதுவும் குழந்தை தானே. என்னுடையதூய ஆடை அதைத் தடுத்தது. ஐந்து பத்துரூபாய் நோட்டைக் கொடுத்து கண்ணத்தைத் தட்டிவிட்டேன். வாங்கிய வேகத்தில் திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கு ஓடியது. ஒரூ கண நேரத்தில் பத்து வாகனங்கள் கடக்கிற அந்த பரபரப்பில் அதன் ஊடு பயணம் பார்க்கிற எவரையும் பயம் கொள்ளச் செய்யும். தூரத்தில் மறைந்திருந்த, அவளது தாயிடம் போய் பத்து ரூபாயைக் கொடுத்தது. நாங்கள் கடந்து வந்த இரண்டு விபத்துக்கள் நினைவுக்கு வர, பயமும் வேதனையுமாக அந்தக்குழந்தையை விட்டுகண்கள் வெளிவர மருத்தது. எதனாலோ பள்ளிக்குப் போகும்போது சைக்கிள் காரனிடம் இடிபட்டு கையுடைந்த மகனின் நினைவுகள் வந்து போனது.


" இப்டி பச்சக் குழந்தய நடுரோட்டில் ஓடவிட்டுச் சம்பாதிக்கிற இவங்கள யெல்லாம் நிக்கவச்சு சுடனும் ".


எனக்கருகே ஒரு கருத்தாளர் துடித்துக்கொண்டிருந்தார். அவருக்குப் பங்குச் சந்தை பற்றியும் ராமலிங்க ராஜு பற்றியும்கட்டாயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அப்போது தான் சொகுசுக்காரிலிருந்து இறங்கிய இரண்டு கனவான்களின் பின்னாலே
" ய்ய்ய்ய்யாயா......"
என்றபடி தொடர்ந்தாள் மூத்தவள். சத்யம் நிறுவனம் குறித்த அவர்களின் பேச்சைத் தொடர்ந்தார்கள். ஐநூறு கோடியை அரசு விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கொண்டே நடந்தார்கள். உணவு விடுதிக்குள் அடுத்த இருக்கையில் தம்பதிகள் அமர்ந்திருந்தார்கள். குளிருக்காக கம்பளி உடை போர்த்திய, இரண்டு வயதுக்குழந்தையின் சப்பாட்டுத் தட்டில், சாம்பாரில் கிடந்த மிளகாயைக் கடிக்கக் கூடாது உரைக்கும், என்று அதட்டியபடி ஊட்டிக் கொண்டிருந்தார்கள்.
"சீக்கிரம் சாப்பிடு இல்ல இட்லிய அந்த பாப்பாவுக்கு குடுத்துருவேன்"


ஜன்னல் வழியே பார்த்தபோது மறுபடியும் அந்த இரண்டுவயதுக் குழந்தை ஒரு நண்பரின் கால்சராயைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது.


காவலாளிக்கும், கருத்தாளருக்கும், தெருவில் திரியும் அழுக்குக் குழந்தைகளுக்கும், பாதுகாக்கப்பட்ட குழந்தைகளுக்கும், எனக்கும், உனக்கும் இன்னும் நூத்திப்பத்துக் கோடிப்பேருக்கும் சத்தியமாய் சத்யம் நிறுவனத்தில் என்ன நடக்கிறதென்று தெரியாது.

13.1.09

ஓசிக் கரும்பின் ருசி


பசுமை மங்கிய காடுகளை,

பண்ணையருவாள்கள் அறுத்திருக்கும்.

ஊருக்குத் தெற்கே பத்துப் பதினைந்து

வைக்கோல் படப்புகள்

வெள்ளை யானை போல

நின்று கொண்டிருக்கும்.

சம்சாரி வீட்டுக் காளைமாடுகளின் கழுத்தில்

தொங்கும் மணிகளும், கொம்பும் பளபளக்கும்.


பின்னிரவு நேரங்களைக் குளிர் வந்து ஆக்ரமிக்கும்.

இடம் பற்றாத வீடுகளிலிருந்து வெளியேறிய

விடலைகளும் கிழடுகளும் கோவிலுக்குள்

அரிசிச் சாக்கை விரித்து அதன் கதகதப்பில் சுருண்டு கிடக்கும்.

வீடுகளில் சுர்ரென்ற சத்தம் கேட்கும் சாமத்தில்.

முழித்துக் கொள்ளும் எங்களுக்கோ அப்போதே விடிந்துவிடும்.

அம்மா பல்விளக்கச் சொல்லுமுன்னாளே

ஒரு தோசை இரைப்பையில் கிடக்கும்.


தெருவிளக்கில் கூடியிருக்கும்

சிறுவர்களின்அன்பைப்போலவே

வெறும் தோசை இடம் மாறும்.


ஓசி வாங்கிய ஒற்றைக் கரும்பை

எட்டுத் துண்டாகவெட்டியபோதுதெறித்த கருப்புச்சாறைச்

சப்புக்கொட்டுகிறஎங்க ஊர்ப்பொங்கல்.
0
அந்த நாட்களில் அறிமுகமில்லாத ,

புது அரிசி, நெய்ப் பொங்கல்சாமி படம், கட்டுக்கரும்பு

எல்லாம் இப்போது கிடக்கிறது.

12.1.09

துடைப்பங்களின் அளவும் தேவையும் அதிகரிக்கிறது


மதுரை, அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், விருதுநகர் இந்த ஐந்து ஊர்களில் உள்ள தங்கும் விடுதிகளில் இடம்கிடைக்கவில்லை. அதே போல உணவு விடுதிகளிலும் எப்போதும் கூட்டம். மதுரையை நோக்கி பயணிக்கிற எல்லா வாகனங்களும் குறைந்தது ஒரு மணிநேரம் காலதாமதமாகவே இலக்குகளை அடைய முடிந்தது. சுற்றுப்புறக் கிராமங்கள் எல்லாவற்றிலும் புதியரக சொகுசு வாகனங்கள் புழுதியைக்கிளப்பிக் கொண்டு திரிந்தன. கிட்டத்தட்ட தமிழகத்தின் அணைத்து துறைஅமைச்சர்களும் சென்னையில் இல்லை. இதே கதிதான் எல்லா அரசியல் கட்சிகளுக்கும்.அதனால் எந்தப் பத்திரிகையைப் புரட்டினாலும் ஒரே ஒரு செய்திதான் பக்கங்களை நிரப்பிக்கொண்டிருந்தன. மொத்த தமிழகமே திருமங்கலத்தை மையம் கொண்டிருந்தது.



திருமங்கலம் இடைத்தேர்தல் தான் இத்தனை கலேபரத்துக்கும் காரணம். ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டிபோட்டு ஒரு வாக்குக்கு குறைந்தது ஐயாயிரம் ரூபாய் கொடுத்ததாகப் பேச்சு நடக்கிறது. தொகை முன்னப்பின்ன இருக்கலாம் ஆனால் பணம் கொடுக்கப்பட்டது. வறுத்த கோழியும், சீமைச்சாராயமும் திரும்பிய திசையெல்லாம் கிடந்திருக்கிறது. வாக்குப் பதிவன்று திருப்பரங்குன்றம் மலை உயரத்துக்கு பிரியாணி குமிந்து கிடந்ததாம். கொஞ்சம் மனதைத் திடப்படுத்திக்கொண்டு படியுங்கள்.இந்த இடைத்தேர்தலுக்கு செலவழிந்த மொத்தத் தொகை நூறு கோடி இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் அங்கலாய்க்கின்றன.



ஒரு இடைத்தேர்தல் என்ன சமூக பொருளாதார அரசியல் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும் என்று தெரியவில்லை.ஆனால் செலவழிந்ததாகச் சொல்லப்படுகிற நூறு கோடியில். லட்சோப லட்சம் குழந்தைகளுக்கு இலவசக்கல்வி கொடுக்கலாம். ஆயிரம் பேருக்கு வேலை உத்திராவாதம் கிடைக்கிற உற்பத்தி கேந்திரங்கள் நிறுவலாம். அல்லதுமருத்துவ மனைகளில் கிடைக்காத மருந்துகளைத் தருவிக்கலாம். அல்லது குடிநீர், போக்கு வரத்து மேம்பாட்டுக்கு கொள்ளையடித்தது போக மீதியைச் செலவிடலாம்.



இப்படியெதும் இல்லாமல் தங்களின் கொழுப்பை தனித்துக்கொள்ள கோழிச்சண்டை நடத்துகிறது ஆளும், எதிர் அரசியல். உற்றுக் கவனித்தால் ரத்த அழுத்தம் உயர்கிறது.


சுத்தப்படுத்த முடியாதோ எனது தெருவில் ஓடும் சாக்கடையை.

உதிர, உதிரப்பூக்கும்




வாசலில் தீபம் வரிசையேற்றிக்கொண்டிருந்த, குளிர்மாலைக் கார்த்திகையில் ஒருநாள்.


இரண்டு பெண்கள் வந்தார்கள்.
என்னோடும் என் மனைவியோடும் மிக அன்பானார்கள்.

என்வீடு தீப ஒளியை விட இன்னும் பிரகாசமானது. குடிவந்ததிலிருந்து அர்த்தமற்றுப் பூத்துக்கிடந்தது பூச்செடிகள்.தயங்கித்தயங்கிப் பூப்பறித்தபோது அர்த்தங்கள் மீட்டி ஆடிக்குதித்தன.



அடிக்கடி வந்து, பெண்மக்கள் இல்லாது இருண்ட என்வீட்டை இரவல் அன்பால் ஒளியூட்டினார்கள். வேளையும்சண்டையிட்ட நாளையும் பகிர்ந்து கொண்டார்கள்அன்புத்தொல்லையால். மனைவியின்தனிமையைமடியிலமர்ந்து

பகிர்ந்துகொண்டார்கள்.


எனது வாசலில்,செயற்கைத் தாரகை தொங்கியதுகிறிஸ்து பிறந்த நாளில். எங்களின் உண்மையான மதம் எது. தீராத கேள்விகளோடு திரும்பிப்போனார்கள்.

ஆறு கார்த்திகை கடந்துவிட்டது. அவர்கள் திரும்பி வராத காரணம் அறியாதுஇருண்டு கிடக்கிறது தீபங்களின் சுற்றுப்புறம்.
இதோ செம்பருத்திப் பூக்கேட்டுநீள்கிறது இன்னொரு பூ.

மீண்டும் அர்த்தங்கள் மீட்டி ஆடிக்குதிக்கின்றனபழைய செடிகள்.

9.1.09

ஒரு வனதேவதையும், ரெண்டு பொன்வண்டுகளும்




கரிச்சான்குருவி விட்டு விட்டு கூவிக்கொண்டிருந்தது. எங்கோ தூரத்தில் கைக்குழந்தை அழுகிற சத்தம் கேட்டது. சாத்தூர் ரோட்டில் கடந்து போகிற வாகனங்களின் சத்தம் சன்னமாகக்கேட்டுக்கொண்டிருந்தது. அகக்கக்கா குருவியின் சத்தம் கேட்டதும் தூக்கம் சுத்தமாக ஓடிப்போயிருந்தது. வேலவர் வீட்டுத்தொழுவத்தில் யாரோ சாணி எடுத்துக்கொண்டு அரக்கப்பாரக்க ஓடுவது தெரிந்தது. இன்னும் சின்னச்சுப்பைய்யாத்தாத்தா எந்திரிக்கவில்லை. அவர் மட்டும் முழித்திருந்தால் விடிந்தும் விடியாத அந்தபொழுதில் ''அவா எவடி'' சொல்லி வசவை ஆரம்பித்திருப்பார். மூஞ்சைக்கழுவும் போது அந்த அக்கக்கா குருவி மறுபடியும் கூப்பிட்டது. விசில் சத்தத்தைப்போல இருக்கிற அதில் உயிருக்குள் கயிறு போட்டு இழுக்கிற தொணி இருந்தது. மணி என்ன இருக்கும் என்று நினைத்தான். பிறகு ''மணி பார்த்து என்ன கலெக்டர் வேலைக்கா கிளம்பப்போற'' அந்த ஹெச் எம்டி வாட்சை வித்து கூறை செம்ம பண்ணியபோது அம்மா சொன்னது சம்பந்தமில்லாமல் ஞாபகத்திற்கு வந்தது. சட்டையைப்போட்டுக்கொண்டு தெருவுக்கு வந்தான்.

கீழக்கோயில் வரை ஆளரவமில்லாத தெருவில் ரெண்டு குண்டு பல்பும், ஒரு ட்யூப் லைட்டும் தூங்கிக்கொண்டிருந்தது. நாலு வருசம் இரவில் படிக்க ஒளி தந்த அந்த ட்யூப் லைட்டுக்கு கீழே நின்று அன்னாந்து பார்த்தான். கவருக்குள் பூச்சிகளும் வண்டுகளும் நிறைந்துகிடக்க அதைத்தாண்டி மஞ்சளும் வெள்ளையும் கலந்த ஒளி அவன் மேல் விழுந்து கொண்டிருந்தது. சீட்டாட்டம் இல்லாத இரவுகளில், கட்டப்பஞ்சாயத்து இல்லாத இரவுகளில், இவனும் அந்த ட்யூப் லைட்டும் தான் போட்டி போட்டு முழித்திருப்பார்கள். நடந்தான். ஊர்தாண்டியதும் பூத்திருக்கும் கடலைச்செடி, பச்சைப்பசேரென்று செழித்துகிடக்கும் சோள நாத்து வாசமெல்லாம் கலந்து வந்தது. இதென்ன இப்படியொரு குதூகலம் குதித்து ஓடவேண்டும் போலொரு ஆர்ப்பாட்டம். கம்மாக்கரைக்கு போய் ததும்பி வழிகிற தண்ணீரின் மேல் பரப்பில் கால் நிலவின் பிம்பம் மிதப்பதை பார்த்துக்கொண்டிருந்து விட்டு திரும்பினான். சந்தனக்கட்டை முதலியாரின் காடு தரிசாகக்கிடந்தது. சுற்றிலும் கடலையும் பாசிப்பயறும் உழுந்தும் செழித்திருக்க ஒருகாலத்தில் ஓகோவென்றிருந்த பெரும்பண்ணை தரிசாகக்கிடந்தது. மங்கிய நிலா வெளிச்சத்தில் எதோ மினுங்குவது போலிருந்தது. அழகிய கம்மல் போலிருக்க, குனிந்து பார்த்தான். கிளிப்பச்சைக்கலரில் தங்கத்தை தடவியது போல ஒரு பூச்சி. இன்னும் உற்றுப்பார்த்தபோது பச்சைக்கும் தங்கக்கலருக்கும் நடு நடுவே சின்னச்சின்ன கருப்பு புள்ளிகள். அட என்ன ஜொலிப்பு. நிலவொளியைப்பழிக்கிற தங்க கதிர்கள் அதன் மேலிருந்து கிளம்புகிற வண்டை, குத்துக்காலிட்டு உட்கார்ந்து பார்த்தான். இயற்கை வாரித்தந்த அந்த ஏகாந்தத்தில் நிலவைப்போல, இவனைப்போல அந்தப்பொன்வண்டும், சங்கம் சேர்ந்துகொண்டதான நினைப்பில் மிதந்திருந்தான். கடுகிப்பறந்து போக புரவி தரும், உருகிக்கசிந்து போக இசையும் தரும். நனைந்து குளிர்ந்து போக அருவி தரும், அந்தத் தனிமை மேகம் பார்க்கையில் மழை பார்க்கையில் ஆயிரம் பேருக்கு நடுவேயும் தனித்துப் பயணிக்கச்செய்யும். பொன்வண்டு நகர்ந்தது இரண்டாகத்தெரிந்தது. காட்சிப்பிழையா என்று கண்கசக்கிப்பார்த்தான், நிஜம். ஆனும் பென்னுமாக இரண்டு பொன்வண்டுகள். கொஞ்சம் குறு குறுப்பிருந்தது அயல் வீட்டு படுக்கையறை பார்த்த குற்ற உணர்விருந்தது. இயற்கையின் பரப்பில் அந்தரங்கம் ஏது. அதுவென்ன அன்னலச்சுமியும் குசும்பனுமா?.ஒன்பது படிக்கிற போது, பம்பரம் விளையாண்டுகொண்டிருந்த விருவிருப்பைக்கலைந்தது பவுல் தான். உண்மையைச்சொன்னால் வரமாட்டார்கள் என்பதறிந்து பாம்பு பார்த்ததாகச்சொன்னதும் நாலுபேரும் அடித்துப்பிடித்து ஓடிப்போய் பார்த்த முதல் வயதுவந்தோர்களுக்கான காட்சி. ஆர்வமும் அருவருப்பும் கலந்து தீர்த்து வைத்த பதினாலு வருசப்புதிர்.நகர்ந்து போன இரண்டிலெது பெண் எனும் தேடல் உருவானது. மறைந்திருந்தது பெண் வண்டென கண்டுகொள்ள விஞ்ஞானியாகவேண்டிய அவசியமில்லை. ஆனால் அதில் ஏதோ ஒரு மனுஷி உருவம் தெரிந்தது. பாசிமாலை,பவுடர், கைக்குட்டையை விட உயிருள்ள பரிசுகள் இன்னுமதிகமான ஈர்ப்பைத்தருமென நம்பினான்.பொத்திய கைகளுக்குள் பொன்வண்டு குறு குறுத்தது. ஒரு வெற்றுத்தீப்பெட்டி தேடி எடுத்து அதற்குள் அடைத்துக்கொண்டான்.வெகு தூரத்தில் கசகசப்புக்கேட்டது அனில் தீப்பெட்டியாபீசுக்குப்பொகிற பெண்கள் ஒத்தையாலை நெருங்கிக்கொண்டிருந்தார்கள்.ஒத்தையடிப்பாதையிலிருந்து வந்தபோது, வண்டிப்பாதயில் நீட்டிக்கொண்டிருக்கும் சோள நாற்றுத்தோகையிலுள்ள பனித்துளிகள் பட்டு சிலீரிட்டது. பனித்தண்ணீர் ஒட்டியிருக்கிற தோகயை இழுக்கிற போது கிரீச்செனும் இசைவந்தது. ஒவ்வொரு தோகையாக இழுத்துக்கொண்டே நடந்தான்.

'' ச்சீய்ய் வழிய விடு ''கார்த்தீஸ்வரி நின்று கொண்டிருந்தாள். எதிர்பாராத அவளது பிரசன்னம் குழப்பத்தையும் பயத்தையும் உண்டு பண்ணியது.''பேயறஞ்சமாரியிருக்க சாமத்துல இங்கென்ன சோலி '''' நா ஒன்னியக்கவுனிக்கல '''' ஆமா சூட்ட மாட்டுனதும் ஊர்ப்போட்டச்சிக பறட்டயாத்தான் தெரிவாளுக ''
ஒரு கார்த்தியலுக்கு, அவளுக்கு ஒட்டுப்புல் தேய்க்கப்போய் அவ அம்மையிட்ட வாங்க்கிக்கட்டிக்கிட்டது, சுருக்குத்தைத்தது. இவளும் கொஞ்சம் மினுக்கு, ரொம்ப வாய். மாட்டிக்கிட்டா வசவுக்குள்ள முக்கித்தொவச்சி காயப்போட்டுருவா. பம்புசெட்டுக்கு குளிக்க வந்தா அவளப்பத்ததும் ஆம்ம்பளக்கூட்டம் பதறி ஓடிவிடும்.அவள் கடந்து போனப்பிறகும் பாண்ட்ஸ் பவுடர் வாசம் அவனைச்சுற்றியே வட்டமடித்தது. கையிலிருக்கும் பொன்வண்டை பற்றிக்கொண்டு நடந்தான். இரண்டு எட்டு நடந்தபிறகு, தனியே இந்தச்சாமத்தில் எப்படிப்போவாள், குழப்பத்தோடு திரும்பிப்பார்த்தான். போனவள் திரும்பிக்கொண்டிருந்தாள்.

'' அவுகெல்லாம் என்னேரம் போனாக '''' போன தேரத்துக்கு இப்பல்லாம் ஒரு கட்டை உருவிருக்கனும் '''' மணியென்னருக்கும், இந்தா யோவ், அழகர் நாய்க்கர் பொழி வரைக்கும் வந்து உட்டுருங்க '' மரியாதைக்கான இடைவெளியில் ரெண்டுபேரும் நடந்தார்கள். '' வாயில என்ன கொழக்கட்டயா ''
அவளுக்கு ஒட்டுப்புல் தேய்க்க வந்ததையும், அம்மாவிடம் வசவு பட்டதையும் சொல்லவும் சிரித்துக்கொண்டு
'' சரியான பயந்தாங்கொள்ளி '' மேகத்திட்டுக்குள் நிலவு மறைந்ததால் இருட்டெங்குமாக ஒளிர்ந்தது. பச்சை படர்ந்த காடு பளீரென்றசெம்மண்பாதை.மௌனமும் திட்டமில்லாத வார்த்தைகளுமாக நகர்ந்தது. சீனிக்கிழங்கு வேண்டுமா என்று கேட்டாள். மறுத்தபோது விசம் ஒன்றுமில்லை சொல்லி கையை வலியப்பிடித்து இழுத்துக்கொடுத்தாள்.பொன்வண்டோ டு தீப்பெட்டி கீழே விழுந்தது. குனிந்து அவளே எடுத்து.
'' ஊம போல இருந்து எரும போல சாணி போடுமாம் '' '' ம்ம்ம்....'''' பீடியெல்லாங்குடிப்பீங்களா '''' இல்ல, பொன்வண்டிருக்கு அதுக்குள்ள '''' இதென்ன சின்ன நொள்ள கணக்க, பூச்சி போட்டையெல்லாம் புடிச்சிக்கிட்டு '' தூக்கி எறிந்த தீப்பெட்டிக்குள்ளிருந்து பெண் வண்டு பறந்து போனது.விடிய இன்னும் நிறய்ய நேரமிருந்தது.

8.1.09

ரத்தம் சிந்திய வீதிகளில் குழந்தைகள் எப்படிவிளையாடும்




இரண்டு வாரங்களாக காசா நகரம் வெடிகுண்டுகளின் அதிர்வுகளில் சின்னாபின்னப்படுத்தப்பட்டிருக்கிறது. வெகுமக்கள் வாழும் பகுதி இஸ்ரேலித்துருப்புக்களின் வேட்டைக்காடாக மாறியிருக்கிறது. உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல் கிடைப்பதற்கான அணைத்து வழிகளும் அடைபட்ட நிலையில், ஒரு பதின்மூன்று நாட்களுக்குப்பின்னர், அகில உலகசெஞ்சிலுவைச்சங்கம் பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கங்கள் சிலவற்றோடு இணைந்து காசா நகர் அதன் சுற்றுப்புறங்களில்மீட்புப்பணிகளுக்காக அணுமதிக்கப் பட்டிருக்கின்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சிகள் குறித்த தகவல்கள் மனித குலத்தை உலுக்குவதாக இருக்கிறது.



அழுகிக்கிடந்த பனிரெண்டு உடல்களுக்கு அருகில் நான்கு குழந்தைகள் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்திருக்கிறார்கள். எழுந்து நிற்கக்கூடத்திராணியற்ற அந்தப்பிஞ்சுகள் பல நாட்கள் பிணத்தருகே திக்கற்றுக்கிடந்திருக்கிறார்கள் பிறந்த பாவமும் பிழைத்த பாவமும்தவிர வேறேதும் அறியாக் குழந்தைகள். விளையாடத்தெருக்கள் இல்லாத குழந்தைகள். மயானத்தில் கூட மரமும், கூரையுமிருக்கும் இவை ஏதுமற்ற இடிபாடுகளில் காய்ந்த குழந்தைகள், காய்ச்சலென்றால் கூட உடற்பதறும் பெற்றோரில்லாத குழந்தைகள்.கண்ணீரில்லாத குழந்தைகள், அதைத்துடைக்கச் சுட்டு விரலில்லாத குழந்தைகள். சிதறிக்கிடக்கிற உடல்களோடு என்ன செய்திருக்கும்.


மனித உரிமை ஆர்வலர்களும், செஞ்சிலுவைச்சங்கமும் பதில் சொல்லவியலாத கடுங்குற்றச்சாட்டை இஸ்ரேல் மீது இறக்கியிருக்கிறார்கள். எல்லா இனப்படுகொலைக்கும் சொல்லுவதுப்போல ஏதாவது காரனம் சொல்லலாம்.ஆனால் வராலாறு கோரும் மனிதாபிமானக் குற்றச்சாட்டை மறுதலிக்கப் பதிலிருக்காது.


தூங்குகின்ற குழந்தைகளின் கன்னத்தில் சிரிப்புரேகை படர்கிறபோது, அது கடுவுளோடு பேசுகிறதுஎன்று சந்தோசப்பட அங்கே யாரும் இல்லை. விளையாடாத குழந்தைகளுக்குகடவுளிடம் என்னபேச்சு வேண்டிக்கிடக்கு ?

7.1.09

கூலிக்காரனின் ஆயுதம்.







காப்பிக்கலரும், கருப்புக்கலரும் குழைந்த
கைப்பிடியில்லா ஒரு ஆயுதம் இருக்கிறது.
ஊரில் அதைத் துருப்பிடித்து போனது
என்று சொல்லுவார்கள்.
எங்கோ விறகொடிக்கப் போகையில்
கண்டெடுத்தது என்பதைத்தவிர
அதன் தோற்ற வரலாறு ஒன்றுமில்லை.
யாருக்கும் இரவல் கொடுக்கச் சம்மதிக்காத
எனது தாத்தாவின் விருப்ப பிராணி.
பேரீச்சம்பழக்காரரிடம் போட்டுத் தின்றநாளில்
எனக்கு விழுந்த வசவும், அடியும்
இன்னும் தித்திப்பாய்க் கசக்கிறது.

வில்லும், பம்பரமும், கிட்டிப்புல்லும்
விளையாடக் கொடுத்தது அதை வைத்துத்தான்.
எங்க வீட்டுக் கூனக் கெழவிக்கு
ஊனுகம்பும் ஆடுமேய்க்க தொரட்டிக்கம்பும்
செதுக்கித்தந்த உற்பத்திக்கருவி.
எதுத்தவீட்டு ஏகலைவத் தாத்தன்
காக்காவலிப்புக்கு அடிக்கடிகையில்
கொடுக்கிற மருத்துவக்கருவி.
வேலையில்லாத காலங்களில்
வேலிக்காடுகளைச் சாய்த்து விறகாக்கி
விற்றுத்தரும் சம்பாத்தியக் கருவி.
குலசாமி கெழவனாருக்கு
பொங்க வைக்கயில்
பூவோடும், மஞ்சளோடும்,
பூஜைத் தேங்காயோடும் மங்களமாகப் பயணப்படும்.
எரவானத்தில், செதுக்கியோடும்,
மம்பட்டியோடும், எட்டு ராத்தல் சம்மட்டியோடும்,
எங்கள் கூரை வீட்டில்
நிரந்தர குடிகொண்ட உழைப்பாளி.
யாராவது மொண்டி அருவா
என்று சொல்லிவிட்டால்
ஆங்காரத்தோடு சண்டைக்குப்போவார்.

1.1.09

தீராமல் தொடரும் வித்தியாசங்கள்

நகரத்திலிருந்து எட்டு அல்லது ஒண்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு பிரசவத்தில் சிக்கல். அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை. அரிதான பிரிவு வகை ரத்தம் தேவைப்படுவதாகச் சொல்லவும் நிலை குலைந்துபோன குடும்பத்தாருக்கு சொந்தக்காரர் கொடுத்த தகவலைத்தொடர்ந்து ஜனநாயக வாலிபர்சங்க ரத்ததானக்கழகத்தில் உதவிகேட்டார்கள். ஏற்பாடாகியது. உறவினர்களை அழைத்து வந்தார்கள். ரத்தம் கொடுக்க வந்த அன்பளிப்பாளரை அழைத்துக்கொண்டு ஒரு ரத்த பரிசோதனை நிலையத்துக்குப் போனார்கள். உடன் வந்த கிராமத்து உறவினர்கள் கையில் இரண்டு சாப்பாட்டுத் தூக்குவாளி இருந்ததைக் கவனித்த ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் அது எதற்கு என்றுகேட்டாராம். ரத்தம் கொண்டுபோக என்று பதில் சொன்னார்களாம் உறவினர்கள். பின்னர் ரத்த தானத்துக்கான குருதியை பதப்படுத்தித்தான் எடுத்துச்செல்ல முடியும் என்கிற விபரம் சொல்லி அனுப்பி வைத்ததார்களாம். இந்தத் தகவலைக் கேள்விப்படுகிறபோது சிரிக்கத்தான் தோணும். ஒரு திரைப்பட நகைச்சுவைக்கான எல்லா அம்சமும் இருக்கிற இந்தச்சேதியில், உள்ளார்ந்த பலப்பல அசமத்துவங்களை உள்ளடக்கி இருக்கிறது.


நிலவைச்சுற்றுகிற சந்திராயன் விண்கலத்தை, தரையில் ஒரு கட்டுப்பாட்டு அறையிலிருந்தே வழிநடத்த முடிகிற விஞ்ஞான உலகமிது. சென்னையில் நடக்கிற அறுவை சிகிச்சையை, அமெரிக்காவிலிருந்து கண்காணிக்க முடிகிறகணினி யுகமிது. தன் தாயையும், தந்தையையும் தவிர ஏனையவற்றையெல்லாம் புதிதாகப்பார்க்கிற மழலைகள் இன்று அயிரத்து முன்னூற்று முப்பது குரளையும் மனப்பாடமாக ஒப்புவிக்கிறார்கள். காரணம் அறிவு கூடியிருக்கிறது. இருந்தாலும், கோடிக்கணக்கான ஜனங்கள் வெட்டுக்காயத்துக்கு மண்ணைத்தெள்ளிப் பூசுகிற அறியாமையும், அதன் ஊற்றுக்கண்ணான இல்லாமையாலும் அல்லாடுகிறதும் இதே தேசத்தில் தான். இந்தியாவில் கற்கால மக்களிலிருந்துகணினி கால மக்கள் வரை பரிணாமத்தின் எல்லாச் சமூகமுகத்தின் மிச்சசொச்சங்களும் இன்னும் இருக்கிறது.