31.10.11

ஏழாவது அறிவு கொண்ட இந்தியாவில்....


இந்தியா ஒரு துணைக்கண்டம்.இந்தியா ஒரு தீபகற்பம்.இந்தியாவில் கற்கால மனிதர் தொடங்கி கணினி யுக மனிதர் வரையான எல்லா (specimen)அடையாளங் களையும் எச்சங்களையும் நாம் காணலாம்.

நமக்கு 2500க்கும்மேற்பட்ட வருட வரலாறு இருக்கிறது.முப்பெரும்கடல் ஐம்பெரும் காப்பியம் கிடக்கிறது. 4546 ஜாதிகளுக்குமேல் பல்கிப்பெருகிக் கிடக்கிறது. முப்பத்துமுக்கோடி தேவர்கள் ( இது ஜாதியில்லை)  உருவாகி அருள்பாலித்துக் கிடக்கிறார்கள்.

ஆனால் ஆயிரம் ஆயிரம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் இந்தியாவுக்கென்ன பங்கு இருக்கிறது ?.

பேருந்தைப் பார்க்காமல்செத்துப் போனவர்கள் உண்டு, ரயிலில் ஏறாமல் வம்சம் தொலைத்தவர்கள் உண்டு,ரேடியோ வாங்காமல் ஏங்கிச் செத்த வர்கள், தொலைக்காட்சி வாங்கமுடியாதவர்கள் இங்குண்டு ஆனால் அவற்றை யெல்லாம் சரிக்கட்ட வந்ததுதான் இந்த செல்போன் என்கிற அலை பேசி.

அதன் சுருக் கவரலாறு பார்ப்போமா ?

1910 ஆம் ஆண்டு லார்ஸ் மாக்னஸ் எரிக்சன் தனது காரில் ஒரு தொலை பேசியை பொருத்துகிறார். போகிற வழியில் எங்காவது தந்திக் கம்பி தென் பட்டால் தனது காரில் இருக்கும் தொலைபேசியை கொக்கிபோட்டு இணைத் துக் கொண்டு தொடர்பு கொள்வாராம். நம்ம ஊர்கள்ல கலியானம் சடங்குக்கு கொக்கிபோட்டு கரண்டு சுடுவம்ல அத மாதிரித்தான். ஆனால் அவர் அதை முறைப்படி அரசாங்கத்தில் பதிவு செய்து முன் அனுமதி   வாங்கிக் கொண்டார்.

பெர்லின் முதல் ஹம்பர்க் வரை ஓடிய புகைவண்டியின் முதல்வகுப்புப் பெட்டியில் தந்தியில்லாத் தொலைபேசி வசதி உருவாக்கப்பட்டது. இது நிகழ்ந்தது 1926 ஆம் வருடம். அதற்கு ரேடியோ டெலிபோன் என்று பெயரி ட் டார்கள். அதே காலத்தில் பயணிகள் விமானத்திலும் இந்த வசதி செய்யத் தொடங்கினார்கள்.இதன் நீட்சியாக இரண்டாவது உலகப்போரில் ஜெர்மன் நாட்டு பீரங்கிகளிலும் இந்த ரேடியோ டெலபோனி முறை கையாளப் பட்டது. இதைக் கண்ட ஜெர்மன் காவல்துறை ரோந்து வாகனங்களிலும் இந்த தந்தியில்லாத் தொலைபேசியை உபயோகிக்கத்தொடங்கியது.

அதைத் தொடர்ந்து இருவழி தந்தியில்லாத் தொலைபேசியை முதன் முதலாக வாடகைக் கார்களிலும், பின்னர் காவலர் வாகனங்களிலும் பின்னர் பெரு முதலாளிகளின் இந்த இருவழி தொலைபேசியை உபயோகிக்கத் தொடங் கினார்கள். ஆனால் அதில் தொடர்பு எண்கள் இருக்காது.இதுதான் பின்னாட்களில் வாக்கி டாக்கியாக உருமாறியது.

1940 ஆண்டுவாக்கில் ப்ளாக்பெர்ரி நிறுவணம் அதை இராணுவத்துக்காகச் சந்தைப் படுத்தத் தொடங்கியது.

1946 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் இரண்டு தொழில்நுட்பவல்லுநர்கள் ஜி.ஷப்பிரோவும், சர்ஜென்கோவும் இணைந்து கார்களுக்குள் பொருத்தக்கூடிய தந்தியில்லாத் தொலைபேசியை வெற்றிகரமாகக் கண்டு பிடித்தார்கள். என்ன வெற்றியென்றால் இந்த தொலைபேசியை 20 கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்கும் சாதாரண தொலபேசியுடன் இணைக்கமுடியும்.

1947 ல் டக்ளஸ் ரிங் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து அலை பேசி களுக்கான கோபுரங்கள் அமைத்து அதன் மூலம் மின்காந்த அலை வரிசை களை உருவாக்கி அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார்கள்.

இந்தக் கண்டுபிடிப்புகளில் சினிமாத் துறையும் இணைந்து கொண்டது  1950 ஆம் ஆண்டு வெளிவந்த சப்ரினா என்கிற திரைப்படத்தில் பெருமுதலாளி உபயோகிக்கிற அலைபேசியின் மாதிரிகள் பின்னர் பயன்பாட்டுக்கும் வந்தன.

அப்புறம் 1957 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் இன்னொரு இளம் விஞ்ஞானி குப்ரியானோவிச் கையடக்கமான முதல் அலைபேசியக் கண்டு பிடித்தார். அபோதைய கையடத்தின் எடை என்ன தெரியுமா மூன்று கிலோ. அவரே அதை 500 கிராம் எடையுள்ளதாகக்குறைக்க ஒருவருடம் போராடி 1958ஆம் ஆண்டு வெற்றி கண்டார்.

எனினும் முறைப்படி இந்தக்கண்டுபிடிப்புகளை காப்புரிமையோடு சந்தைப் படுத்த முடிந்தது அமெரிக்காவால்தான்.1970 ஆண்டு பெல் ஆராய்ச்சி நிறுவணத்திற்கு அலைபேசியின் முதல் காப்புரிமை வழங்கப்பட்டது. அதே போல இதை முதன்முதலில் உபயோகப் படுத்தத் தொடங்கிய தனிமனிதன் பிரிட்டிஷ் இளவரசன் பிலிப் மட்டுமே.

ஊரைவிட்டுதனியே காரில்போகும் போது இளவரசியோடு காதல் மொழி பேசிக்கொள்ளத் தான் இதை உபயோகித்தானாம். இதற்கு இடைப்பட்ட காலத் தில் இந்தியா தவிர்த்த பல்வேறு நாடுகள் செல்போன் குறித்த கண்டு பிடிப்பு களில் தத்தமது முயற்சிகளை பங்களித்தன.

இறுதியில் 1973 ஆம் ஆண்டு மோட்டோரோலா நிறுவணத்தின் மார்ட்டீன் கூப்பர் தனது முதல் பொதுமக்கள் செல்போனை பயன் பாட்டுக்கு வெளி யிட்டார். அதன் பெயர் என்ன தெரியுமா ’ மோட்டோரோலா டைனா 8000+ ’

1981 ஆம் ஆண்டு டென்மார்க்,ஸ்வீடன்,பின்லாந்து ஆகியநாடுகள் அகில உலக இணைப்புவசதிகொண்ட ( Nordic Mobile Telephone (NMT) system ) 1G  அலைக்கற்றை அலைபேசியை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

1985 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் வோடோபோன் நிறுவணம் அதனது செல் போனை அறிமுகப்படுத்தியது.

1990 ஆம் ஆண்டு 2G அலைக்கற்றை வசதிகொண்ட செல்லுலார்போன்கள் உலகம் முழுவதும் சந்தைப்படுத்தப்பட்டன.

இந்தவரலாற்றுநெடுகிலும் இந்தியா பற்றிய ஒருவரி கூட கிடையாது. வரி வேண்டாம். ஒரு கமா, ஆச்சரியக்குறி, புல்ஸ்டாப்புக்கூடக் கிடையாது என்பதே நமது பெருமை.

1986 ஆம் ஆண்டுக்கும் 1990 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வர்த்தகம், வெளியுறவு,முதலீடு போன்றவற்றில் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்டிருந்த நாடுகளில் நுழைய தனக்கு ஏதுவான பாதைகளை சுலபாமாக உருவாக்கிக்கொண்டது அமெரிக்கா.

அநேகமாக இதே காலக்கட்டத்தில்தான் சோவியத் ருஷ்யா சுக்குநூறாக உடைக்கப்பட்டு ( 1986 ) அமெரிக்காவின் கட்டுப்பாடுகள்,பயம் எல்லாம் அழிக்கப்பட்டது. சதாம் உசேன் இரான் இராக் போரை அறிவித்தார் 1980.

உலகத்துக்கு புதிய பொருளாதாரக்கொளகைகள்போல எய்ட்ஸ் என்னும் இன்னொரு மிரட்டல் கண்டுபிடிக்கப்பட்டது (1981).

இதே காலக்கட்டத்தில் தான் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு (1984) அரியணை ஏறிய ராசீவ் காந்தி புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தி படுக்கையறைக் கதவு வரை திறந்துவிட்டார்,

போபாலில் விஷவாயு கசிந்தது.

உலகம் முழுக்க செங்கல் சைசில் செல்போனை அறிமுகப் படுத்திக் கொண்டிருந்த இதே காலக்கட்டத்தில் தான்  கன்னியா குமரியிலிருந்து காஷ்மீர் வரை செங்கல் திரட்டி அதன் மூலம் இந்துத்துவா வெறியையும் திரட்டிக்கொண்டிருந்தது இந்தியா.

இதே காலங்களில் தான் தமிழகமும் ஆந்திராவும் சட்டி சுடுகிறதென்று தப்பித்து அடுப்பிற்குள் விழுந்தது. எம்ஜியாரும்,என்டிஆரும் தங்களது நடிப்புத் திறமை களை அரசியலில் ஓட்டுக்களாக மாற்றமுடிந்ததும் இதே காலத்தில்தான்.

எனக்குத்தெரிந்து பழம்பெருமை கொண்ட இந்தியா விஞ்ஞான உலகுக்கும், பயன்பாட்டுக்கும் கண்டுபிடித்துக்கொடுத்த பெருமைகள் அவ்வளவாக இல்லை.

புரட்சி நடிகன் எம் ஆர் ராதா சொன்னதுபோல எல்லோரும் நீராவியில் கப்பலையும்,ரயிலையும் இயக்கிக்கொண்டிருந்த போது நாம் அதை வைத்து இட்லி அவித்துக்கொண்டிருந்தோம்.

அதே போல யாராலும் அழிக்கமுடியாத இனிஎவராலும் இதற்குமேல் கண்டுபிடிக்கமுடியாது என்று சரணாகதி அடையும் அளவுக்கு ஜாதியைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறோம்.

இல்லை நாம் ரொம்பக் கண்டுபிடித்திருக்கிறோம் என்று எவரேனும் சொல்ல வந்தால் மீண்டும் சிலேட்டுப் புத்தகத்தோடு படிக்கக் காத்திருக்கிறது உலகம்.

30.10.11

ஜன்னலும், கண்களும் சேர்த்துப்பிடித்த படங்கள்.


பேருந்துகளின் ஜன்னலோர இருக்கை வெறும் காற்றையும், கடந்துபோகும் இயற்கையையும் காண்பித்துச் செல்லுவதில்லை. கூடவே மனிதர்களையும் துரிதப்படம் பிடித்துக் காட்டுகிறது. புயலின் வருகை தமிழகத்தில் காற்றோடு மழையையும் கொண்டுவந்துகொட்டுகிறது.தீபாவளியைக் கொண்டாட விட வில்லை என்று மனம்வெதும்புகிற ஜனங்களுக்கு எப்படி மழையைக் கொண் டாட  மனம் லயிக்கும்.

சாலைகள் எல்லாம் கரும்பச்சை ஓவியத்தின் ஊடே  கழுவித்துடைத்த கருப்புக்கோடுபோல நீண்டுகிடக்கிறது. அதற்கருகிலேயே புத்தம்புது பழுப்புத்தண்ணீர் இன்னொரு கோடுகிழித்துக்கொண்டு ஓடுகிறது. எங்கிருந்தன இத்தனை பசும்புல்லும் இவ்வளவுகாலமாய் என்று அறிவைக் கிளறிவிடும் அதன் வசீகரச்சிரிப்பு அறுபது கிலோ மீட்டர்வேகத்தில் கடந்துபோகிறது.

முகத்திலடிக்கும் சாரல் மொத்தமாக குளிர் நினைவுகளை அள்ளித் தெளிக்கிறது.  இருக்கட்டும் இன்னொரு பயணத்துக்கென நினைவை மட்டுப்படுத்த ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட வேண்டியிருக்கிறது. முன்னிருக்கையில் இருக்கும் மூதாட்டியின் குளிர்போக்க போர்வையில்லை. கையே நீண்டு இன்னொரு கண்ணாடியை இறக்குகிறது. விருதுநகரில் ஏறும்போது இடம்மாறி உட்கார்ந்து இருக்கை தரவில்லையென்று பழித்த பழம் திரும்பிச்சிரித்து ஸ்நேகம் வளர்க்கிறது.

போகவழியில்லாததால் முளைவிட்ட பயிர்களை மூழ்கடித்துக்கொண்டு ஆக்ரமிக்கும் தண்ணீரைத் திருப்பிவிட கையிலிருக்கிறது நனைந்த மண் வெட்டி. முழுவதும் நனைந்து விட்ட உலகத்தார்க்கு அச்சாணிக்கிழவனின் முதுகில் கிடக்கிறது நவீனக்குடைகளின் முன்னோடி.யூரியாச்சாக்கு கொங்காணி. சண்டைக்காரனின்  அடுத்த வயலிலும் தேங்கிக்கிடக்கும் தண்ணீரை வெட்டிவிட்டு நிமிர்கிறவனின் முகத்தில் விழுகிற மழைத்துளிகள் சொல்லும் நன்றி போதும் எப்போதும்.

நிறுத்தமில்லா இடத்தில் நனைந்த கையுயர்த்தி இடம்கேட்கும் பயணிக்காக பிரேக்கை அழுத்துகிறது  அந்த ஓட்டுனரின் ஈரக்கால்கள். நாற்கரச்சாலையின் வளைவில் எங்கிருந்தோ கொண்டுவந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு தூங்கும் காவலரின் கனவிலும் வந்து தொலைக்கிறது அடுத்து வரப்போகும் இன்னொரு காவல். காட்டுப்பாதையில் காத்துக்கிடக்கும் காக்கிச்சட்டைக்கு தூக்குவாளியில் தேநீரும் சட்டைப்பைக்குள் சிகரெட்டுப்பெட்டியும் கொண்டு வரும் சிறுவனுக்கு பின்னாட்களில் தெரியலாம் இரும்புவாசமடிக்கும் அரசு எந்திரத்தின் இதயங்கள்.

26.10.11

அழுக்கில் குளிக்கப்போகும் மாற்றங்கள்


தமிழகத்து புரட்சியை அடுத்து வரும்
தலைத் தீபாவளி இது.
இருட்டிக்கொண்டுவருகிற
மேகத்தைப் பார்த்துச் சபிக்கிறது
மினரல்வாட்டர் வண்டிகாரனிடம்
குழையும் வீரத்தமிழகம்.
அவசர அவசரமாக மூட்டைகளில்
வெடிப்பார்சலைச் சுமந்துகொண்டு
அரசு அலுவலர் குடியிருப்புகள்
நோக்கிவிரைகிறது
அன்னா ஹசாரேயின்
இளைஞர்படை இருசக்கரவாகனங்கள்.
விடிகாலையிலே எழுந்து
ஒரு சுற்று மாற்றங்களைப்
பார்த்து வரக்கிளம்பினால்
வழியெங்கும் சிதறிக்கிடக்கிறது
வெடிகளடைத்த தமிழ்பாடநூல்  குப்பைகளும்,
வெறிகளடைத்த தமிழ் கலச்சாரக் குப்பிகளும்.
லக்கான் கோழிக்கடையில் நேற்றுவரை கிலோ 120
இன்னைக்குமட்டும் 150 ரூபாய்.
அரசியலும் சமயமுமாகச்சேர்ந்து
ஆயிரம் ஆயிரம் அழுக்கு
படிந்த சாக்கடைக்குள்
முழுகப்போகிறது எண்ணெய்தேய்த்தபடி.

17.10.11

வாகைசூடட்டும் புதுப்புதுக் கதைகள்.



சூட்டோடு சூடாக பார்த்துவிடத் துடித்து முடியாமல் போனது. இந்த இரண்டு வார இடைவெளியில் பார்க்கநேர்ந்த விளம்பரங்கள் உச்சிமண்டையில்  உட்கார்ந்துகொண்டு என்னைப்பார் என்னைப்பார் என்று கெஞ்சியது. சிட்பியா டோனில் அல்லது கேவாக்கலரில்  விளம்பரம் விரிய அது எனது பால்ய நினைவுகளைக் கிளறிவிட்டு விட்டது. மீளக் கிராமத்துக்குள் போகிற போதெல்லாம் பால்யத்தின் நினைவுகள் மட்டுமே நிழலாடமுடியும்.நாங்கள் ஏறி விளையாண்ட உரல்களும் மதில்களும் குள்ளமாகிவிட்டதுப்பொன்ற பிரம்மை உண்டாகும். ஆனால் அவற்றை வேரோடு தோண்டியெடுத்து  காட்சிகளாய்க் கொண்டுவந்து கொட்டியிருக்கிறார் இயக்குனர் சற்குணம்.

சொல்லப்பட்ட கதை நூற்றுக்கு நூறு கொத்தடிமைகளின் கதை. இரவுகளிலும் கூட நிழலென நீளும் அவர்களின் துயரத்தைக்கோடிட்டு மட்டும் காட்டிவிட்டு அந்த துயரத்துக்குள் இருந்து நகர்த்தப்படும் வாழ்க்கையைச் சின்னச் சின்ன சந்தோசங்களாக கோர்த்திருக்கிறார் இயக்குனர். ஒரு கலைப்படத்துக்கு மிக அருகில் நகரும் இந்த திரைப்படம் முந்தைய களவாணிபோல கொண்டாடப் படாததற்கு செங்கல் அறுக்கிற கொத்தடிமைகள் மட்டுமே காரணம்.  விளிம்பு மக்களிலும் ஒருகுறுகிய எண்ணிக்கையில் தமிழகத்தில் வாழும் அவர்களது வாழ்க்கை ஏனைய சமூகத்துக்கு முற்றிலும் அந்நியமானது.  வெறும் உழைப்புச் சுரண்டலோடு நின்று போகிறவராக ஆண்டை  பொன் வண்ணனைக் காண்பித் திருப்பது கொஞ்சம் நழுவல் ரகம். அல்லது முழுக்க முழுக்க குழந்தை உழைப்பை  சுற்றுகிற காரணத்தால்  பொன் வண்ணன் முழுக்கச் செதுக்கப் படாமல் போயிருக்கலாம். ஆயினும் கொத்தடிமைகளின் வாழ்க்கை சொல்லமுடியாத இருள் அடர்ந்தது. அதுவும் அறுபதுகளின் மத்தியில் ஆன காலம் என்பதால் ஆதிக்கம் இன்னும் கூடுதலாகவே இருக்கவாய்ப்பிருக்கிறது.

எங்கள்முதல் ஆவணப்படத்துக்காக கேபிள் குழி தோண்டும் ஒருகுடும்பத்தை ஒருவாரகாலமாக படம் பிடித்தோம். வெறும் பணிரெண்டு நிமிடங்கள் நீடிக்கிற அந்த ஆவணத்துக்கு அவ்வப்போது அவர்களுக்குத்தெரியாமல் படம் பிடித் தோம். ஒருவாரத்துக்குப் பின்னால் அதிலிருக்கிற ஒரு பெண் காணவில்லை.  கேட்டதற்கு,ஊருக்கு (சேலத்துக்கு பக்கத்திலாம்)  போனதாகச்சொன்னார்கள். ஊருக்குப் போகிறேன் என்று சொன்னதற்காக கங்காணி அவளைக் கணவன் முன்னாடியே கன்னத்தில் அடித்தானாம். இது 2005 ஆம் ஆண்டுவாக்கில் நடந்தது. 1966 ல்  அதுவும் ஆதிக்கம் செரிந்த புதுக்கோட்டைப்பகுதியில் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்று ஊகித்துக்கொள்ளுங்கள்.

ஆயினும் அந்த ’கண்டெடுத்தான் காட்டு’ மனிதர்களைச் சுற்றியும், அவர்களு க்கான அறிவொளி குறித்தும் பேசுவதால் இந்தப்படத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கணும்.

குருவிக்காரர்,வைத்தியர்,தம்பிராமையா,அப்புறம் சூரங்குடி ( தம்பி) கந்தசாமி ஆகிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஆண் பாத்திரங்களும் இனியா, ஊனமுற்ற சிறுவனின் தாய் என இரண்டே இரண்டு பெண்பாத்திரங்களும் தவிர இந்தப் படமெங்கும் வியாபித்திருப்பவர்கள் அந்த சிறுவர்களும் அவர்கள் அடிக்கிற லூட்டியும் தான். சதா நேரமும் பயமுறுத்திக்கொண்டிருக்கும் ஆதிக்கத்தின் மீது மறைமுகமான அவர்களுக்குள்ளே புழங்கிக்கொள்ளும் விமர்சனம் இருக்கும். அந்த விமர்சனத்தை பொழுதுபோக்காக கடத்தும்  விளிம்பு மனிதர் களிடத்தில் வியந்து வியந்து போற்றக் கூடிய குசும்பு மண்டிக்கிடக்கும்.
அதோடு கூடவே இயற்கையோடு இரண்டறக் கலந்த அற்புதமான வாழ்வு முறை இருக்கும். அவர்களிடத்தில் ஆதிப்பொதுவுடமை வாழ்க்கையின் எச்சங்கள் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த அரிய பொக்கிஷங்களை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார் சற்குணம்.

மரத்தில் மீன் ஏறுவது,குளத்தில் அடியில் கிடக்கிற மீன் புழுவைக்கடிக்கும்போது அது என்னவகை எனத் துள்ளியப்படுத்துவது,புகை போட்டு எலிப்பிடிப்பது,செத்துப்போன குருவிக்காரருக்கு படப்பு வைப்பதென்று இந்த கணினி யுகம் மறந்து போன கிராம வாழ்க்கையை சின்ன சின்ன காட்சிகளில் மீட்டித் தருகிறது வாகைசூடவா. இனியா இதுவரை வந்து தங்களை கிராமத்துப்பெண்ணாக உருமாற்றிக்கொண்ட புகழ்பெற்ற தமிழ் நாயகிகளை விழுங்கிச்செறித்தபடி அநாயசப் படுத்துகிறார். அவரும் கூட கன்னடத்துக்காரராமே. கலை எல்லைகளற்றது. அதுபோலவே காதலும் வரம்புகளற்றது. ஊருக்கு வந்த வாத்தியாரை காதற்கணவனாய் வரித்துக் கொள்கிற கண்டெடுத்தான்காட்டுப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் இனியா. அதற்குச் சம்பவங்களும், பின்புலமும் கதையும் வலுவூட்டியிருக்கிறது. வாத்தியார் விமலை ஏகடாசி பண்னிவிட்டு இந்தப்பக்கம் திரும்பி தனக்குள் சிரிக்கிற இனியாவின் அந்த மேனரிசம் நெடுநாள் நினைவுகளில் கிடக்கும்.

இரவில் முசிறிக்கு தீப்பந்தங்களோடு காட்டு வழியே நடந்துபோகிற காட்சி தமிழ்சினிமாவுக்கு அர்த்தம்கூடுதலாகச்சேர்க்கிறகாட்சி. அதை  அனுபவித் தவர்களைக் கட்டாயம் அலைக்கழிக்கும் அந்தக்காட்சி.
http://skaamaraj.blogspot.com/2010/04/blog-post_09.html
( நேரமிருந்தால் கொஞ்சம் படியுங்கள் )

நடந்துவரும் கூட்டத்துக்குள் இருளும் ரகசிய சில்மிஷங்களும் கலவையாக சூடுபரவிக்கிடக்கும் அப்போது தீப்பந்தங்கள் வழிமறிக்கிற நெருடல்களாக மாறும். இப்படிப்படம் முழுக்க ஒரு  விளிம்பு வாழ்க்கையை செதுக்கிச்செதுக்கி வைத்திருக்கிற படம். மிருனாள் சென் இயக்கி எண்பதுகளில் வெளிவந்த மந்தன் திரைப்படத்தை நினைக்க வைத்தாலும் வைத்துவிட்டுப்போகட்டும். அவர்களுக்குள் தூவப்படும் கல்வி இந்த சமூக மடமைகளில் இருந்து  உடைத்துக் கொண்டு வெளிவர உதவும் கிரியா ஊக்கியாக மாறவேண்டும் என்கிற கனவிருக்கிற எல்லோரும் அங்கீகரிக்கிற படைப்பாக வந்திருக்கிறது வாகை சூடவா.

விமலின் நடிப்பை, இசையை, தொழில்நுட்பத்தை எல்லாம் தனித்தனியே சொல்லுகிற அளவுக்கு எனக்கு திரைப்பட ஞானம் இல்லை. ஒரு வலுவுள்ள  கதை செய்நேர்த்திமிக்க படைப்பாளனின் கையில் கிடைக்கும் போது அந்தக் குழுவும் செய்நேர்த்திமிக்கதாக மாறும். வரண்டு கிடந்த தமிழ்ச் சினிமாவுக்குள் கதைகளோடு களமிறங்கும் எல்லோருக்குமான வெற்றியாக இந்தப்படமும் இருக்கட்டும்.

உள்ளாட்சியைக் கைப்பற்றப் போவது யார் ?. ஜாதியா,ஊழலா இல்லை ஹசாரேவா



பேஸ்புக்குக்கும் ப்ளாக்குக்கும் அலைந்து அலைந்து கண்கள் வலித்திருந்தது. காலைச்சாப்பாட்டை எடுத்துவைத்த இணை கிறுக்குத்தான் பிடிச்சிருச்சி என்று சொல்லிக்கொண்டே அதை எடுத்து மூடிவைத்துவிட்டு தொலைக்காட்சிக்குள் தொலைந்துவிட்டார்.பகல் முழுவதும் யாரவது வந்து வாக்குறுதி நோட்டீசும் மாதிரி வாக்க்குச் சீட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.ஒரு சில நோட்டீசில் காந்தி எம்ஜியார் காமாராஜர் அம்பேத்கர் முத்துராமலிங்கம் அழகுமுத்து வ.உ.சி அப்துல்கலாம் இம்மானுவேல்சேகரன். இன்னும் ஒருசில நோட்டீசில் பெரியாரும் முத்துராமலிங்கமும் அருகருகே காட்சிதந்தார்கள். பார்த்தபோது சிரிப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.

அடுத்த வருடத்திலிருந்து முழுமையாக மின்வெட்டே இருக்காது என்று அம்மா அறிக்கைவிடுகிறார். அதைப்படித்த ஒரு இளைஞன் ஆமாமா பரமக்குடி மாதிரி முழுக்க முழுக்க ஆளவெட்ட ஆரம்பிச்சுருவாங்க அதனால மின்சாரத்த வெட்டத் தேரமிருக்காது என்று சொல்லுகிறார். ஆனால் அதே பரமக்குடிக்கு ஓட்டுக்.கேட்கப்போன கேப்டன் இனிமேல் இடஒதுக்கீடு என்பதே இருக்கக்கூடாது என்கிற தனது ஆராய்ச்சியை தெருவில் கொட்டுகிறார். அப்போ இந்த ஆறுபேர் படுகொலையும் இடஒதுக்கீட்டுக்கு எதிராகத்தானா என்கிற நக்கலுக்கு அவர் எப்படிப்பதில் சொல்லுவார்.  கைக்கெட்டாத தூரத்தில் இருந்து தான் கேள்விக்கேக்கனும்.

இந்தத்தேர்தல் எப்படியெல்லாம் தான் குட்டிக்கரணம் போடவைக்கிறது. மூன்றுமுறை தொடர்ந்து பஞ்சாயத்துதலைவராக இருந்த ஒருவர் நான்காவது முறையாக தனது மனைவியை நிறுத்துகிறார். அதோடு நிற்காமல் நான் ஆட்சிப் பொறுப்பேற்றால் பொதுமக்களுக்கு  நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பேன் என்று கூச்ச நாச்சமில்லாமல் உறுதிமொழி கொடுக்கிறார். காலையில் டீக்கடைக்கு வந்த ஒரு
பட்டாசுக் கம்பெனி முதலாளி அந்த ஊரின் அடுத்த பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிடுபவர். ராத்திரியானா ஒரு நூருரூவாக்கட்டு காலியாப் போகுது என்று சொல்லிவிட்டு கோடு போட்ட டவுசரிலிருந்து மீதிரூபாயை எடுத்துக் காட்டுகிற்றார். அதைப்பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ’எல்லாத்துக்கும் வாங்கிக்,கொடுக்ககூடாது  அண்ணாச்சி,டெய்லி ஒரு இருபது பேருக்கு மட்டும் வாங்கிக் கொடுக்கணும். அதுவும் கண்ட பயக வருவாய்ங்க கவனமாப் பாத்து வாங்கிக் கொடுக்கணும்’. என்று அறிவுறை சொல்லுகிறார்.

ஓட்டுவீடுகள் மட்டுமே நிறைந்திருக்கிற அந்த ஊரில் ஆனையாக்குவேன் பூனையாக்குவேன் என்று சொல்லி பஞ்சாயத்துதலைவர் பதவியேற்ற ஒருவர் ஒரே வருடத்தில் மூன்று மாடி வீடுகட்டுகிறார். இரண்டு டாடா ஏசி வாங்கி வாடகைக்கு விடுகிறார்.குண்டிகிழிந்த டவுசர் போட்டுக்கொண்டலைந்த மகனுக்கு பல்சர் வண்டி வாங்கிக்கொடுக்கிறார்.நட்ட நடுத்தெருவில் சாக்கடையோடும் ஊரில் அந்தப்பல்சர் வண்டியில் அவன் சிட்டாய்ப் பறக்கிறான். அதுவரை அண்ணாதிமுக திமுக தேமுதிக மதிமுக கொடிகளுக்கு இடையில் இருக்கிற வித்தியாசம் கூடத்தெரியாத கூமுட்டையாக இருந்தவர் பழுத்த அரசியல்வாதியாகி ஆளும்கட்சியின் விவசாய அணிச் செயலாளாராகிறார். அதற்குப்பிறகு அங்கிருக்கிற வேலிக் காட்டையெல்லாம் எர்த்மூவர் வைத்து திருத்தி, அளந்து, கல்நட்டி, செம்மண் கோடு போட்டு, ரியல் எஸ்டேட் தொழில் செய்ய ஆரம்பிக்கிறார். ஏங்கெல்சையும் டார்வினையும் காலில்போட்டு மிதிக்கிறபடியான பரிணாமம் இது.

இதையெல்லாம் பக்கத்துவீட்டில் இருந்து பார்த்துப் பொருமிக் கொண்டிருக்கும் மதினிக்காரி சாப்பாடுவைக்கிற நேரமெல்லாம் பங்காளிக்கு
பொழைக்கிற வழிசொல்லிக் கொடுக்கிறாள். அவளும் பத்துப்பவுனில் ஒத்தை வட முறுக்குச்செயின் போட்டுக்கொண்டு டாடா ஏசியின் முன்னாடி உட்கார்ந்துகொண்டு மாரியம்மன் கோவிலுக்கு போக ஆசைப்படமாட்டாளா என்ன? அந்த ஆசைதான் இந்த தேர்தலில் அண்ணனையும் தம்பியையும் எதிர் எதிராக பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிட வைக்கிறது. நாப்பதுவருஷம் தண்ணிபாய்ச்சி சேர்த்து வச்ச கம்மாப்பிஞ்சையை கிரயம் எழுதிக்கொடுத்து கத்தை கத்தையாய் நோட்டுவைத்துக்கொண்டு க்ரேடு க்ரேடாக குவார்ட்டர் வாங்கிக் குவிக்கிறார்கள்.

ஒரு நகராட்சியின் மொத்த வாக்குகள் எத்தனை அதில் எந்த ஜாதி அதிக எண்ணிக்கை என்கிற கணக்கெடுப்புக்கு அப்புறம் தான் வேட்பாளர் தேர்வு நடக்கிறது.ஆளும், எதிர்,கூட்டணி,சுயேச்சை வேட்பாளர் எல்லோரும் அதே ஜாதிக்காரர்களாகவே நிறுத்தப்படுகிற்றார்கள்.
ஆனால் இந்தச்சூழலில் தான் ஒரு வலைத்தளம் கணக்கெடுப்பில்  நல்லவேட்பாளர்களைத்தான் இந்த உள்ளாட்சி தேர்தல் தேர்ந்தெடுக்கும் என்று எழுபது சதவீதம் பேர் ஓட்டளித்து கருத்துக்கணிக்கிறது. இந்த மாதத்தில்தான் புத்தகம் பேசுது உள் அட்டையில் பேராசிரியர் க.பழனித்துரை எழுதிய ‘ தமிழக கிராமப்புற உள்ளாட்சி( கடமையும்- அதிகாரங்களும்) என்கிற கையேடு விற்பனைக்கு வருவதாக விளம்பரப்படுத்துகிறது.

இதுவேறு இதிகாசம் ஆவணப்படத்துக்காக காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.பழனித்துரையைச் சந்திதித்து  பேட்டி யெடுத்தோம்.அப்போது அவர் சொன்னது.பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்களாம்.மதுரைப் பகுதியில் சுமார் ஐநூறு பஞ்சாயத்து தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்களாம்.கலந்துகொண்டவர்கள் ஆயிரம் பேர் கணக்கு உதைக்க. என்னவென மண்டையைப்போட்டுக்குழப்பிக்கடைசியிகண்டுகொண்டார்களாம்.தேர்ந்தெடுக்கப்பட்ட அத்துணைபெண் தலைவர்களின் கணவன் மார்களும் கூட வந்திருந்ததுதான் காரணம்.உடனே மேடையிலிருந்து பொறுப்பாளர்கள் சம்பந்தப்பட்ட தலைவர்கள் மட்டுமே இருக்கமுடியும் அவர்களின் கணவன்மார்கள் வெளியே போகவேண்டும் என்று சொன்னதும் சுமார் 250 எழுந்துபோய்விட்டார்களாம். மீண்டும் கணக்கு உதைக்கவே மண்டையைக் குடைந்து கண்டுபிடித்ததில். அந்தக்கூடுதல் 250, பேர் ஊராட்சிமன்றத்தின் எழுத்தர்கள் என்பது தெரியவந்தது.
ஆமாம் பெரும்பாலான தலித் மற்றும் படிக்காத தலைவர்களின் பஞ்சாயத்துகளில் கிட்டத்தட்ட தலைவர் பொறுப்பைப் பிடுங்கிக்கொள்வது
பேண்ட் சட்டை போட்ட எழுத்தர்களே.

இந்தக்கொடுமை போதாதென்று பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், மற்றும் வங்கிக்கிளைகளில் தலித் பஞ்சாயத்து தலைவர் நின்று கொண்டிருக்க பஞ்சாயத்து கிளார்க்குகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முன்னே நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் வன்கொடுமைகள் நடப்பதாகச்சொன்னார்.  அதன்பிறகான எனது வங்கிநாட்களில் நான் அதைக் கவனிக்கத் தொடங்கினேன்.பேராசிரியர் சொன்னதைவிடவும் நூறுமடங்கு கூடுதலாகவே நடக்கிறது. காரணம்அரசு அலுவலர்கள், வங்கிமேலாளர்கள்,ஊழியர்கள்,என்.ஜி.ஓ, க்கள் எல்லோருக்கும் கூடுதல் சமூகப்பொறுப்பு இருக்கிற சுரணையே இல்லாமல் ஜாதியத்தடத்திலே பயணிக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில்தான் வருடா வருடம் சிறப்பாகச் செயல்படும் ஊராட்சி மன்றங்களைத் தேர்ந்தெடுத்து  மத்திய அரசும் மாநில அரசும் பரிசு அளிக்கிறது, அதைத்தான் முன்மாதிரி பஞ்சாயத்துக்களாக அரசு அறிவிக்கிறது. அந்தப் பஞ்சாயத்துக்கள் எம்ஜியார்,ரஜினி மாதிரி எந்த விதமான சாகச அற்புதங்களியும் செய்துவிடுவதில்லை. அரசு அறிவித்த திட்டங்களை முறைப்படி அமல்படுத்துகின்றன, அவ்வளவுதான். அப்படி அறிவிக்கப்படுகிற பஞ்சாயத்துக்கள் மூன்றே முன்றுதான். ஆனால் தமிழகத்திலுள்ள மொத்தப்பஞ்சாயத்துக்கள் சுமார் 12856.
எனில் மீதமுள்ள 12853 பஞ்சாயத்துக்களும் என்ன செய்கின்றன. மீண்டும் முதலில் இருந்து வாருங்கள்.

இதைக்கண்காணிக்க அரசு எந்திரத்தில் ஏற்பாடுகள் இல்லையா என்றால் அழகாக இருக்கிறது. ஆனால் எல்லாக்களவாணித்தனங்களும் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. இங்கேதான் காவல்துறையின் உச்சாணிப்பொறுப்பில் இருந்து ஓய்வு பெறும் இகாப க்கள் ஜாதிக் கட்சித் தலைவர்களாகிறார்கள்.வருமாண வரித்துறையின் உயர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெறுகிறவர்கள் தனியார் நிறுவணங்களுக்கு கணக்கு ஆலோசகர்களாகிறார்கள்.பொதுத்துறைவங்கிகளில் இருந்து ஓய்வு பெற்ற மறுநிமிடம் தனியார் நிதிநிறுவணங்களுக்கு மேலாளர்களாக உருமாறுகிறார்கள். அரசுப்பள்ளியில் வேலைபார்த்துக்கொண்டு முழுநேரமும் மெட்ரிக்குலேசன் மாணவர்களுக்கு டியூசன் எடுக்கிறார்கள். இப்படிப்பொறுப்புள்ள கணவான்கள் கூடித்தான் அன்னா ஹசாரேயை கதாநாயகன் ஆக்குகிறார்கள்.

16.10.11

கவிதையில்லை, கணக்கெடுப்பு.


என்பெயர் காத்தன் மகன் முத்தன்
நாங்கள் இப்படித்தான் பெயர்வைத்துக் கொள்ளமுடியும்.
என்ன பெயர் வைத்துக்கொண்டாலும்
என்தெருப்பெயரும் என் மூதாதையர் பெயரும்தான்
எங்களை முந்திக்கொல்லும்.

என்கதவிலக்கம் எதுவாக இருந்தென்ன
ஏழேழுதலைமுறையாய் எட்டிஉதைக்கப்பட்ட
எங்கள் வீட்டுகதவுகள் கவிழ்ந்துகிடக்கிறது.

எனது தொழிலா?  ஒண்ணுமில்லை
பொழப்பூன்னு சொல்லுங்க, சுத்தஞ்செய்றது
சம்பளமா அது மேஸ்த்திரி,பைனான்ஸ்காரர்
பிடுங்கியது போக போட்ட பிச்சை

கேஸ் ஸ்டவ்வா லந்துபண்ணாதிங்கசார்
தொலைக்காட்சிப்பெட்டியா இருக்கிறது
ஆனால் அது அது அரசாங்கத்துக்குச்சொந்தமானது
இருசக்கரவாகனமா இருக்கிறது
ஆனால் அது நகராட்சிக்குச்சொந்தமானது.

குழந்தைகளா அது ஏழெட்டுத்தேறும்
என்ன பண்ணுதுகளா, அதுகளுந்தான்.
.
நீங்கள் இந்த நாட்டுப்பிரஜை
ஓட்டளிப்பது உங்கள் ஜனநாய உரிமை
நீங்கள் நினைத்தவருக்கு
சுதந்திரமாக ஓட்டுப்போடலாம்.
.
எல்லாம் புரிந்தது  முத்தன் எனக்கு
இந்த பிரஜை,ஜனநாயகம், உரிமை, சுதந்திரம்
மட்டும் என்னவென்று தெரியாமல் போனது.
.
இதுவா ?
இது கவிதையில்லை
இந்த தேசம் என்மேல்
வீசியெறிந்த குப்பைகள்.

9.10.11

வேலிமுள் கிழித்த பழய்ய கோடுகள்



எப்போதும் எனக்காகத் தொங்கிக் கொண்டிருக்கும்
வீடு திரும்பிய அப்பனின் தூக்குச்சட்டிக்குள்
எதாவது சில எட்டாவது அதிசயங்கள்.

மஞ்சளும் பச்sசையுமாய் சில மிதுக்கம் பழம்
அரக்குக் கலரில் அரைப்படி எலந்தைப் பழம்
ஆகாய நிறத்தில் புள்ளிகள் நிறைந்த காடைமுட்டை
அம்மையின் முகத்தைகாணாமல் கத்தும் மைனாக்குஞ்சு

கிட்டிப் புல்லும் கவட்டைக் கம்பும்
ஆணியில்லாதபம்பரமும் கயிறு இல்லாத வில்லுமாக
எப்போதும் எனக்காகத் தொங்கிக் கொண்டிருக்கும்
விறகு வெட்டப்போன அப்பனின் தூக்குச்சட்டிக்குள்.

ஆனால் அம்மைக்கு மட்டுமே தெரியும்
அப்பனின் உடம்பெங்கும் எழுதிவைத்த
வேலிமுள் கிழித்த காயங்களின் வலியும்
வட்டிக்குகொடுத்த வைரமுத்துவின் வசவும்.

6.10.11

நாஞ்சில் நாடனின் ’கான்சாஹிப்.’



( வண்ணநிலவனும்,நாஞ்சில்நாடனும் வாரிச்சுருட்டிக்கொள்ளும் ‘காபிர்களின் கதைகள்’ )


எந்த ஒரு அசாத்தியத்தையும் நிகழ்த்தாமல்,சாகசம் என்கிற வார்தையைக் கூட உச்சரிக்காமல், திடீர் திருப்பங்கள் அவர்கள் நடந்து போக்கும் தெருவில் கூட இல்லாமல் சுற்றித்திரியும் இரண்டு பேருடைய சகவாசத்தை சொல்லுகிற சிறுகதை.ஆனால் லயித்துப் போய்,ஆட்டுக்குட்டி மாதிரி நம்மை அவரது எழுத்தின் பின்னாடியே நடக்க வைக்கிற சமாச்சாரம் ஒன்றிருக்கிறது.அது நட்பு.அதை நட்புதான் என்று சொல்லாமல்.நட்புக்கான இல்லக்கணம் இதுதானென்றும் சொல்லாமல்.ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த பிரியத்தை மட்டுமே நம்பி இந்தக்கதையை நகர்த்தியிருப்பது தான் அதன் வசீகரம். கதை ஆரம்பிக்கும்போது இது கதையா நினைவு கூறலா என்கிற முடிவை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கான் என்று முடிகிற பேர்களாகப்பட்டியலிடுவது இப்படி குறுக்குமறுக்காக நம்மை அலையவிட்டு அப்புறம் மும்பைக்கு கூட்டிக்கொண்டு போகிறார் நாஞ்சில் நாடன். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு வீடே ஊராகும்.ஊரை விட்டு தனித்து விடுதியில் இருக்கும் எல்லோருக்கும் அந்த ஊரே வீடாகும்.

தனிமையில் உட்கார்ந்து விட்டத்தைப் பார்த்துகொண்டிருக்கு அலுத்துப்போய் கால் போன போக்கில் போகிற அனுபவம் அலாதியானது. அப்போது தனக்கு கொஞ்சம் இலக்கியமும் தன்னோடு கூடவருபவருக்கு நிறைய்ய இலக்கியமும் தெரிந்து இருப்பது எவ்வளவு  சிலாக்கி யமான விஷயம் என்பதை நாஞ்சில் நாடன் அசத்தலாக எடுத்துவைக்கிறார்.கான்சாஹிப்போடு சேர்ந்து சுற்றிய தெருக்கள்,பார்த்த சினிமாக்கள், நாடகங்கள், மனிதர்கள், ,சிகப்பு விளக்குத்தெருவும் பெண்களும் என்று வழிநெடுக நினைவுகளை நட்டுக்கொண்டு போய் ஒரு தோல்பையில் முடிகிறது கதை. பிரியமான மானிதர்களை நினைவுபடுத்துகிற எல்லாமே பிரியமானதாகவும் பொக்கிஷமாகவும் மாறும். அப்படி ஒரு தோல்பையை மாற்றிக் கையில் கொடுக்கிற சிறுகதையை படிக்கும் எல்லோரும் தங்களை உரசிப் பார்த்துக் கொள்ளச் சொல்லும் . முடிந்தால் அப்படியொரு கதையை எழுதவேண்டும் என்கிற ஏக்கத்தை உண்டுபண்ணும் கதை ’கான்சாஹிப்’.

5.10.11

வண்ணநிலவனும்,நாஞ்சில்நாடனும் வாரிச்சுருட்டிக்கொள்ளும் ‘காபிர்களின் கதைகள்’


சென்னை கேகே நகரில் உள்ள டிஸ்கவரி புக்பேலசுக்கு சென்ற மாதம் போயிருந்த போது சுற்றிச் சுற்றி புத்தகங்கள் காட்சிப் படுத்தப் பட்டிருந்த ஒரு நண்பனின் வீட்டுக்குள் நுழைந்தது போல இருந்தது.புத்தக அலமாரிகளுக்கு மத்தியிதான் அண்ணன் ராஜசுந்தர ராஜனும், விதூஷ்வித்யாவும், பத்மாவும், மேவியும் சகோதரர் கார்த்திகப்பாண்டியனும் இருந்தார்கள்அவர்களோடு பேசிக்கொண்டே புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன்.என்னை இறக்கிவிடவந்த எனது மூத்த மகன் கிஷோர்பாரதிக்கு அங்குதான் எடிட்டிங் குறித்த புத்தகம் ஒன்று வாங்கிக் கொடுத்தேன். அதை அவன் புரட்டிக்கூடப் பார்த்திருக்காமல் இருக்கலாம்.அல்லது படித்திருக்கலாம். ஆனால் அது காலங்காலத்துக்கும் அவனோடு கூட இருக்கும். ஒரு தகப்பனாக நான் அவனுக்கு வாங்கிக்கொடுத்த சில அறிவற்றுள் அதுவும் இடம் பிடிக்கும்.தன்னை யாராவது படிக்கமாட்டார்களா என்கிற ஏக்கத்துடன் அது அவனோடு கூடவே இருக்கும்.

அப்படி ஏக்கத்தோடு டிஸ்கவரி புக்பேலசின் அலமாரிகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் காத்துக்கிடந்தன.நான் பேச்சை தவிர்த்துவிட்டு புத்தகங்களுடன் பேசப்போனேன்.அப்போது தோழர் எஸ்.வி.வேணுகோபால் அவர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய புத்தகங்கள் கிடந்தன. அது தோழர் கீரணூர்ஜாகீர்ராஜாவின் புத்தகங்கள்.எண்பதுகளில் யதேச்சையாக ஒரு பழய்ய கணையாழியில் படித்த நாகூர் ரூமியின் குட்டிவாப்பா என்கிற சிறுகதை என்னை நெடுநாள் அழைக் கழித்த கதை.ஒரு சமூகத்தின் உள்ளார்ந்த விவகாரங்களை மனிதர்களின் நடை உடைபாவனையோடு கலந்து பிசைந்து வைக்கிற அந்த மாதிரியான எழுத்து குட்டிவாப்பா கதையில் கிடந்தது.வயதுதளர்ந்த ஒரு மனிதனை அவனது மூலநோயோடு கூடிய சுவாரஸ்யங்களை அசைபோட்டபடி அவரை நினைவு கூறும் அந்தக்கதை.அதன்பிறகு தான் தோப்பில் முகம்மது மீரானின் அன்புக்கு முதுமையில்லை தொடங்கி ஒன்றிரண்டை வாசிக்கிற ஈர்ப்புவந்தது. அதற் கடுத்து அந்தமக்களின் வாழ்க்கை குறித்து வருகிற எழுத்துக்களை திறம் படச்சொல்லுகிற சமகால எழுத்து தோழர் ஜாகீர்ராஜாவுடையது.

அவர்தான் காபிர்களின் கதைகள் என்கிற பதினெட்டுக்கதைகளை தொகுத்து ஆழி பப்ளிஷர் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டிருக்கிறார். அதில் ஒன்றி ரண்டைத் தவிர எல்லாவற்றையும் படித்தாகிவிட்டது. அதற்கந்த ராமநாத புரத்து தனிமைக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

மஹாகவி சுபரமண்ய பாரதிதொடங்கி அண்ணன் சோ.தர்மன் வரையிலான ஆளுமைகளின் கதைகள்.இந்தப்பதினெட்டுப்பேரும் தங்களின் குறுக்கே வந்த இஸ்லாமியர்கள் பற்றிக்கதை சொல்லியிருக்கிறார்கள். பதினெட்டுப்பேர்களில் எனக்குப்பிடித்த வண்ணநிலவனோடுதான் அதை ஆரம்பித்தேன். ’மெஹ்ருண்ணிஷா ’ ஒரு வாழ்ந்துகெட்ட பெரும் பணக்கார முஸ்லீம் வீட்டின் ஒட்டடை படிந்த சுவர்களுக்குள் பயணமாகிற கதை.அப்படியான வாழ்ந்துகெட்ட கதைகளில் எல்லாமே ஒரு வேலைக்காரர் கட்டாயம் கிடப்பார்.அவர்தான் உடைந்து நொறுங்கிப்போன மனிதாபி மானத்தை எடுத்து அவனது சேவகம் என்கிற அன்பினால் மறுபடி புணரமைப்பார். அப்படிப் புணரமைக்கிற ராமையாவை எல்லோரும் கட்டாயம் வாசிக்கவேண்டும்.

அவரோடும் அந்தகதையின் நாயகி மெஹ்ருண்ணிஷாவோடும்,அந்த வீட்டு சமயற்காரி ஆயிஷாவோடும் நாம் அந்த வீட்டுக்குள் பிரவேசிக்கலாம். ஊராருக்குத்தெரியாமல் அந்த வீட்டு ரகசியங்களைத் தெரிந்து கொள்ளலாம். தனக்கு குழந்தையிலாததால்  கணவனுக்கு இன்னொருத்தியை கைபிடித்துக் கொடுத்துவிட்டு அவளது அப்பா போட்டோவோடும் அவர்கொடுத்த வயலினோடும் அதுகசிகிற இசையோடும் அந்த வீட்டுக்குள்ளே தன்னை தானாகவே அடக்கம் செய்துக்கொள்ளும் மெஹ்ருண்ணிஷா. அவளை அறிய நாம் வண்ணநிலவனின் கையை மட்டும்தான் பிடித்துக்கொண்டு செல்ல வேண்டும். பெண்விடுதலை,மேல்கீழ் முரண்பாட்டை தகர்ப்பது போன்ற வற்றுக்கு வக்காலத்து வாங்காமலும்,இருக்கிற பண்ணை யடிமைத்தனத்துக்கு வால்பிடிக்காமலும் உள்ளபடியான நடப்பை  உருக உருகச் சொல்லுகிற வண்ணநிலவணின் மெஹ்ருண்ணிஷா இந்ததொகுப்பில் ஏழாவது கதையாக வரும்.

அப்புறம் தோழர் நாஞ்சில் நாடனின் ’கான்சாஹிப்.’

2.10.11

வராமல் வந்த மாமணி இந்தப் பஞ்சயத்துராஜ்



இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்று சொன்ன சொல்லில் நிறைய்ய மர்மங்கள் இருக்கிறது.முதலில் ஆன்மா என்கிற சொல்லே மிகவும் மர்மமானது.ஆம் கண்டுபிடிக்க முடியாத,அல்லது இல்லாத ஒன்றை நாம் மர்மமென்றுசொல்லலாம். இரண்டாவதாக அவர்சொன்னது கிராமங்களின் மண் வளங்களையா, இல்லை இயற்கையின் வசீகரத்தையா, இல்லை மனிதர்களையா என்று தெரியாத மர்மங்கள் இருக்கிறது.

அவர் சொன்னது இயற்கையும் மண்ணும் சார்ந்ததாக இருந்தால் அவை இப்போது அழிந்து கொண்டிருக்கிறது.மனிதர்கள் குறித்து என்றால் அவை ஒவ்வொன்றும் ஒரு நாடாக இருந்தது, இருக்கிறது என்பதுதான் நிஜம்.தமிழகம் முழுக்க உள்ளாட்சித்தேர்தல் காய்ச்சல் பரவி கொதித் துக்கொண்டிருக்கும் நேரத்தில் மஹாத்மாவின் பிறந்த நாள் வந்திருக்கிறது. புலால் விற்பனை நிலையங்களும், மதுபானக் கடைகளும் பூட்டிக் கிடக்க்கிற இந்த ஒருநாள் இந்த அரசு அவருக்கு போடுகிற ஒரு கூளைக்கும்பிடு அவ்வளவுதான். நகரங்களில் இந்த இரண்டுவகைக் கடைகள் பூட்டிக்கிடக்க கிராமங்களில் இந்த இரண்டும் தங்குதடையின்றிக் கிடைக்கும் விசித்திரம் நிறைந்த தேசம் இது.

பஞ்சாயத்துராஜ் என்கிற திட்டம்  உண்மையில் மிகவும் உன்னதமானது. அதிகாரப்பரவல் கடைக்கோடி கிரமத்தானுக்கும் போய்ச் சேரவேண்டும் என்கிற திட்டமும் அதற்கான சட்டமும் உருவாவதற்காக பாடுபட்ட கனவுகண்ட அத்துணை சிந்தனையாளர்களும் போறுதற்குறியோர். கொக்கோ கோலாவுக்கு தண்ணீர்தர இந்தியாவின் பிரதமரும்,தமிழக முதல்வரும் ஒத்துக்கொண்டு கையெழுத்திட்ட பின்னாடிக்கூட சம்பந்தப்பட்ட கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் அதை நிரகரிக்கமுடிகிற அதிகாரம் படைத்தது பஞ்சாயத்துராஜ்.
செருப்பு அணிந்துகொண்டு ஆதிக்கசாதித் தெருவில் நடந்தால் உயிர்போகும் அபாயம் இருக்கிற கிராமசபைகளின் தலைமை நாற்காலியில் ஒரு தலித் உட்கார வழிவகை செய்கிற இந்த ஏற்பாடு புரட்சிகரமானது. அதை உள்வாங்கிக்கொண்டு அமல்படுத்திய ராஜீவ்காந்தி தனது இமாலயத் தவறுகளுக்கு பரிகாரம் தேடிக்கொண்ட செய்கை இது.

கிராமங்கள் ஆதிக்க சாதியினரிடமும்,ஆண்டைகளிடமும்,பண்ணையார்களிடமும் சிக்கிக்கொண்டு திக்கித்திணறுகிற போது வாரமல் வந்த மாமணி இது. சாலைகள்,கண்மாய்,ஆறுகள்,வீடுகள்,வீட்டுக்குள் கழிப்பறைகள்,வறுமை தீர வேலைவாய்ப்பு, என்று வறிய மனிதர்களின் கைகளுக்கு நேரடியாக இந்திய அரசின் திட்டங்கள் பகிர்ந்தளிக்க வழிவகை செய்கிற நேர்த்தியான ஏற்பாடு இது. இன்னும் சொல்லிச் சொல்லி சிலாகிக்க ஆயிரமாயிரம் நற்பண்புகள் கொட்டிக்கிடக்கிற திட்டம் இந்த பஞ்சாயத்து ராஜ். எப்படி காமராஜர் காலத்து கல்விச் சாலைகள் இந்தியக் கிராமங்களின் முகங்களைப் புரட்டிப்போட்டதோ அதே போல, அதன் அடுத்த அத்தியாயம் இது. ஆனால் இதைக்கொண்டாட மேட்டிமை வாதிகளும் ஊடகங்களும் தயாராக இல்லை என்பதில் உண்மையான மேல்கீழ் அரசியல் இருக்கிறது.

ஆனால் ஐயோ....அப்படிப்பட்ட அதிகாரத்தை அறுபது ரூபாய் மதுவுக்கும் ஐம்பது ரூபாய் பிரியாணிக்கும் அடகுவைக்கிற நடைமுறையை என்னவெனச் சொல்லுவது. ஊர் ஊராய்ப் போய்ப்பாருங்கள் மதுவின் வாடைக்குள்ளும்,நூறு இருநூறு ரூபாய் லஞ்சக்காசுக்காகவும் பஞ்சாயத்துராஜ் தனது அருமை பெருமைகளை இழந்துகொண்டிருக்கிறது. அந்தப்பெட்டிக்கடையில் ரெண்டுபேர் பேசிக்கொண்டிருந்தார்கள். ’’மொத்தம் 647 ஓட்டு அதுல நம்ம நாயக்கமாரு ஓட்டுமட்டும் 418 ஓட்டு. அவன் 113,இவன் 52,அப்புறம் அல்ரசில்றயெல்லாம் சேத்து மிச்சம் 64 ஓட்டு.நம்ம பயக அத்தனபேரு ஒட்டுமொத்தமா போட்ருவான்.நம்ம தான் இந்த தடவையும்’’.என்று.
மாஞ்சு மாஞ்சு நாளும் பொழுதும் செலவழித்து கொண்டுவந்த இந்த திட்டத்தை பெட்டிக்கடையில் பொழுதுபோகாத ஒரு ஜாதிவெறியன் சீரழிப்பான் என்று நினைத்துப் பார்த்திருப்பார்களா?

ஜனநாயகமும், பஞ்சாயத்துராஜும் திரும்பத் திரும்ப இந்த கடவுளால் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பது தான் இந்த தேசத்தின் பெரும் சோகம்.இதை இந்த அழிமாண்டத்தை சமர்செய்து சீர்செய்யப்போகிற ஒருவனும் இன்னும் பிறக்கவில்லை அவர் அந்த அரக்கர் ஒருநாள் பிறக்காமலா போவார் ?